Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, இப்போதைக்கு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் செய்த ரோகித் சர்மா:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்றதை தொடர்ந்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது எதிர்காலம் குறித்த அனைத்து ஊகங்களுக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நியூசிலாந்தின் இறுதிப்போட்டிக்கு முன்பாக, இந்திய அணியில் அவரது எதிர்காலம் குறித்து பெரும் கேள்வி நிலவியது. இரண்டு மாதங்களில் 38 வயதை எட்ட இருக்கும் ரோகித், 2027ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவின. ஆனால், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், தனது எதிர்காலம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று ரோஹித் சர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.
ரோகித் சர்மா வீடியோ வைரல்:
செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், “மேலும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஒய்வு பெறப்போவதில்லை. வதந்திகள் பரவக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக நான் இதை சொல்கிறேன்” என விளக்கமளித்தார். ரோகித் சர்மாவிடம் இருந்து வந்த இந்த எதிர்பாராத தொனியில் பதிலை கேட்டதும், ஒட்டுமொத்த செய்தியாளர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆட்டநாயகனாக தேர்வு:
துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, ஐசிசி போட்டியின் இறுதிப் போட்டியில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இறுதிப் போட்டியின் போது 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கிச் சென்ற இந்திய கேப்டன் ரோகித், முதல் பந்திலிருந்தே பந்து வீச்சாளர்களை கடுமையாகத் தாக்கி, 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்தார். அவர் 91.56 ஸ்ட்ரைக் ரேட்டில் தனது ரன்களைக் குவித்தார். அதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இப்போது, ஒன்பது ஐ.சி.சி. போட்டிகளின் இறுதிப் போட்டிகளில், ரோஹித் 11 இன்னிங்ஸ்களில் 32.20 சராசரியுடன் 322 ரன்கள் எடுத்துள்ளார், அரைசதம் மற்றும் சிறந்த ஸ்கோர் 76 ஆகும்.
நாக்-அவுட்டில் எலைட் லிஸ்ட்:
இப்போது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 50 ரன்களுக்கும் அதிகமான ரன்களை குவித்த கேப்டன்களுக்கான எலைட் பட்டியலில் ரோகித் சர்மா இணந்துள்ளார். சவுரவ் கங்குலி (ஐசிசி நாக் அவுட் 2000 இறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 117 ரன்கள்), சனத் ஜெயசூர்யா (ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 74 ரன்கள்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஹான்சி குரோன்ஜே (ஐசிசி நாக் அவுட் 1998 இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 61* ரன்கள்) ஆகியோருடன் ரோஹித் இணைந்துள்ளார். எந்தவொரு ஒருநாள் இறுதிப் போட்டியிலும் ரோகித் சர்மா குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இது 2008 ஆம் ஆண்டு காமன்வெல்த் வங்கி தொடர் இறுதிப் போட்டியில் SCG-யில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுத்த 66 ரன்களை விட சிறப்பாக அமைந்தது.