Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதோடு, நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டில் பல்வேறு சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.


அசத்திய ரோகித் படை:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரபரபான இறுதிகட்டத்தில், ஜடேஜா பவுண்டரியை விளாசி வெற்றியை உறுதி செய்தார். இதையடுத்து ரோகித் மற்றும் கோலி மைதானத்திற்குள் விரைந்து சென்று, எதிர்பாராத கொண்டாட்ட நடனத்தில் ஈடுபட்டனர். உற்சாகத்தில் திளைத்த இருவரும், கைகளில் ஸ்டம்புகளை எடுத்துக்கொண்டு தாண்டியா நடனமாடி மகிழ்ந்தனர். இந்தியாவின் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக கோஹ்லி போட்டியை முடித்தாலும், கேப்டன் ரோஹித் இறுதிப் போட்டியில் அதிகபட்சமாக 76 (83) ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.






இந்தியா அபாரம்


2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன், இந்தியா ஒரு வருடத்திற்கும் குறைவான காலகட்டத்திற்குள் இரண்டு ஐசிசி பட்டங்களை வென்றது.  துபாயில் சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்வதற்கு முன்பு ரோகித் சர்மாவின் தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு ஐசிசி தொடர்களில், இறுதி போட்டிகளில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதோடு பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளது.



பல்வேறு சாதனைகள் முறியடிப்பு:



  •  இந்திய அணிக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்

  • தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை விளையாடிய கோலி, 550 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார்.

  • சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களில் 6வது இடத்தில் உள்ளார்

  • நியூசிலாந்து அணிக்கு எதிராக 1000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்

  • ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஒரே எடிஷனில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஷமி (9 விக்கெட்டுகள்) 3வது இடத்தை பிடித்துள்ளனர்

  • சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்ற பெருமையை இந்தியா (3 முறை) பெற்றுள்ளது

  • இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 73 ஓவர்கள் வீசியுள்ளனர். ஐசிசி ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் வீசிய அதிக ஓவர்களாகும்

  • இந்திய அணி துபாய் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.