இந்திய கிரிக்கெட் அணி தற்போதுதான் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடர் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான தொடராக இருந்தது என்றாலும் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு மிகவும் முக்கியமான தொடர். இந்த தொடரில் அஸ்வின் தனது 500வது  டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றினார். அதுமட்டும் இல்லாமல் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடினார். இப்படியான நிலையில் அஸ்வின் தயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் சென்னைக்கு வந்து சென்றார். இப்படியான நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனக்கு எவ்வாறு எல்லாம் உறுதுணையாக இருந்தார் என அஸ்வின் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 




அந்த வீடியோவில், “ எனது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எனக்கு அவரை பார்க்கவேண்டும் எனத் தோன்றியது. நான் விசாரித்ததில் எனது அம்மாவுக்கு சுயநினைவில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும், அம்மாவைப் பார்க்க யாரையும் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் எனது குடும்பத்தினர் கூறினார்கள். இது எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அழுது முடித்துவிட்டு சென்னைக்கு வர விமானம் இருக்கின்றதா என தேடியபோது, விமானம் இல்லை. ராஜ்கோர்ட் விமான நிலையம் மாலை 6 மணிக்கு மூடிவிடுவார்கள். அதன் பின்னர் அங்கு விமான சேவை இருக்காது. நான் என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தபோது எனது அறைக்கு ரோகித் சர்மாவும் ராகுல் ட்ராவிட்டும் வந்தார்கள். 


நான் யோசித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்துவிட்டு, ”என்ன யோசுச்சுட்டு இருக்க, முதல்ல கிளம்பு, அதுதான் கரெக்ட். நான் உனக்கு எதாவது சிறியவகை விமானம் ஏற்பாடு செய்கின்றேன் எனக் கூறினார். அதன் பின்னர் ரோகித் சர்மா என்னுடன் வந்த கமிலேஷ்க்கு போன் செய்து எனது மனநிலை குறித்து தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். குறிப்பாக அஸ்வினுக்கு தைரியம் சொல்லுங்க, உடன் இருந்து பார்த்துக்கொள்ளுங்கள் என இரவு 9.30 மணிக்கு விசாரித்தார். 






என்னால் இதனை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. நான் ஒரு நொடி யோசித்தேன். என்னுடன் இருக்கும் இருவர் பேசிக்கொண்டு இருப்பதுதான் எனக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அந்த தருணத்தில் யோசித்துப் பார்த்தேன், நானே கேப்டனாக இருந்தாலும் ஒரு வீரருக்கு இதுபோல் நடந்தால் போய்ட்டு வா எனக் கூறுவோம். ஆனால் அந்த வீரர் தொடர்பாக விசாரித்துக் கொண்டே இருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாது ஒன்று. இது ரோகித் சம்ராவின் தனித்துவமான தலைமைப் பண்பைக் காட்டுக்கின்றது. நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித்திடம் என்னவோ இருக்கின்றது. ரோகித்தின் நல்ல மனதிற்குத்தான் ஐந்து ஐபிஎல் டைட்டில் வென்றுள்ளார். தோனிக்கு நிகராக வென்றுள்ளார். கடவுள் இதனை காரணமில்லாமல் வழங்க மாட்டார். இதேபோல் தோனியும்  செய்வார். ஆனால் ரோகித் இன்னும் 10 படி முன்னே எடுத்து வைக்கின்றார்” இவ்வாறு அஸ்வின் பேசியுள்ளார்.