மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் எல்லீஸ் பெர்ரி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். எல்லீஸ் பெர்ரி 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மும்பை அணியின் இன்னிங்ஸை மேத்யூஸ் மற்றும் சஜானா ஆகியோர் களமிறங்கினர். இவர்களது கூட்டணி பெங்களூரு அணியின் பந்து வீச்சினை சிறப்பாக கையாண்டு விளையாடியது மட்டும் இல்லாமல், அணியை சிறப்பாக முன்னேற்றிச் சென்றனர். அணியின் ஸ்கோர் 43 ரன்களாக இருந்தபோது மேத்யூஸ் தனது விக்கெட்டினையும் 65 ரன்களில் இருந்தபோது சஜானா தனது விக்கெட்டினை இழந்தார். அதன் பின்னர் மும்பை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது. சஜானா விக்கெட்டில் இருந்து தனது விக்கெட் வேட்டையை தொடங்கிய எல்லீஸ் பெர்ரி, அதன் பின்னர் வந்த மும்பை அணியின் 5 பேட்டர்களையும் அதாவது 6 பேட்டர்களை தொடர்ந்து கைப்பற்றி அசத்தினார்.
மும்பை அணியின் சஜானா, ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர், அமீலா கெர், அமன்ஜோத் கவுர் மற்றும் பூஜா வஸ்தகர் ஆகியோரது விக்கெட்டினைக் கைப்பற்றினார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்மன்ப்ரீத் கவுர் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ப்ரீமியர் லீக் வரலாற்றில் பந்து வீச்சாளர் ஒருவரு 6 விக்கெட்டுகள் ஒரே போட்டியில் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மரிசான் கேப் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியவராக இருந்தார். இவர் இந்த சாதனையை கடந்த சீசனில் படைத்திருந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. போட்டி மும்பை அணியின் வசம் இருந்ததாக அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கையில், பவுலிங்கில் கலக்கிய எல்லீஸ் பெர்ரி பேட்டிங்கிலும் அசத்துவார் என யாருமே நினைக்கவில்லை. அவருடன் இணைந்த ரிச்சா கோஷ் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது மட்டும் இல்லாமல் மேற்கொண்டு விக்கெட்டை இழக்காமல் வெற்றி பெறவும் வைத்தனர். இறுதிவரை களத்தில் இருந்த எல்லீஸ் பெர்ரி 40 ரன்களும் ரிச்சா கோஷ் 36 ரன்களும் சேர்த்திருந்தனர். இதனால் பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 115 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்திய எல்லீஸ் பெர்ரிக்கு ப்ளேயர் ஆஃப்த மேட்ச் விருது கொடுக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.