ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனாலும், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதால் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 வரலாற்றில் இந்திய அணிக்காக விளையாடி அதிக வெற்றிபெற்ற அணியில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளார்.
ரோஹித் சர்மா:
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி 100 வெற்றிகளைப் பெற்ற அணியில் இருந்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 149 டி20 போட்டிகளில் விளையாடி, அதில், 100 வெற்றிபெற்ற அணியில் இடம் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.
அதேபோல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் படைத்துள்ளார். ரிக்கி பாண்டிங் இதுவரை 108 டெஸ்ட் மற்றும் 262 ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.
மூன்று வடிவங்களிலும் அதிக வெற்றிகளை பெற்ற அணியில் இடம்பிடித்த வீரர்கள்:
டெஸ்ட்- ரிக்கி பாண்டிங் (108)
ஒருநாள்- ரிக்கி பாண்டிங் (262)
சர்வதேச டி20- ரோஹித் சர்மா (100)
ரோஹித் சர்மா ரன் அவுட்:
மொஹாலியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் உடன் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இன்னிங்ஸின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரோஹித் சர்மா யாரும் எதிர்பார்க்காத வகையில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப வேண்டியதாயிற்று.
ரோஹித் ஷர்மா ஒரு நேரான ஷாட்டை விளையாடி ரன்களுக்காக ஓடினார். ஆனால் கில் தனது கிரீஸை விட்டு வெளியேறாமல், பின்னால் சென்ற பந்தையே பார்த்து கொண்டிருந்தார். இதையடுத்து இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான இருவரும் ஒரே கிரீஸில் நின்று கொண்டிருக்க, எதிர்முனையில் பந்தை வீசி ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரன் அவுட் செய்தனர். இந்த நிலையில் ரோஹித் சர்மா ரன் அவுட் மூலம் விக்கெட்டை இழந்தார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி:
போட்டியை நடத்தும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் முகமது நபி 42 ரன்கள் குவித்து மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடினார்.
இந்திய அணி சார்பில் முகேஷ் குமார், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இது தவிர சிவம் துபே 1 விக்கெட்டை எடுத்திருந்தார். பின்னர் இலக்கை துரத்திய இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.