ரோகித் சர்மா புதிய சாதனை:


அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையை, ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கையை சேர்ந்த தில்ஷன்,  தென்னாப்ரிக்காவை சேர்ந்த  டூப்ளெசிஸ் மற்றும்  பாகிஸ்தானை சேர்ந்த பாபர் ஆசம் ஆகிய 3 பேர் மட்டுமே, ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்து இருந்தனர். அந்த பட்டியலில் தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.  தொடக்க ஆட்டக்காரராக 21 இன்னின்ங்ஸில் களமிறங்கியுள்ள அவர் அடிக்கும் 6வது சதம் இதுவாகும்.






கோலி தவறவிட்ட சாதனை:


இந்திய அணியின் ரன் மெஷின் எனப்படும் முன்னாள் கேப்டனான கோலி கூட, இந்த சாதனையை படைத்ததில்லை. அனால், கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானிற்கு எதிரான  டி-20 போட்டியில் கோலி சதம் விளாசினார். இதன் மூலம், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய நான்காவது இந்திய வீரர் மற்றும் 20-ஆவது சர்வதேச வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 68 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள கோலி, அதில் 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.


பார்டர் கவாஸ்கர் தொடர்


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைதொடர்ந்து, களமிறங்கிய அந்த அணி வீரர்கள், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.


250 சிக்சர்களை விளாசிய ரோகித்:


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான் கேப்டன் ரோகித் சர்மாவும், துணை கேப்டனான கே.எல்.ராகுலும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோகித் சர்மா சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். முதல் நாளில் ஒரு சிக்சரை விளாசியதன் மூலம், இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 250 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரோகித் 56 ரன்களை எடுத்து இருந்தார்.


இரண்டாவது நாளில் சதம்:


போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மர்பி சுழலில் சிக்கி, அஸ்வின் மற்றும் புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், மறுமுனையில் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம், ரோகித் சர்மா 171 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 14 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும்


ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் சதம்:


முன்னதாக, கடந்த 2021ம் அண்டு செப்டம்பர் மாதம் தான் அவர் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசி இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில், அவர் 127 ரன்களை சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.