ரவீந்திர ஜடேஜா முதல் டெஸ்டின் தொடக்க நாளில் ஆஸ்திரேலியாவை தனது ஐந்து விக்கெட் மூலம் தகர்த்த நிலையில், ஆட்டத்தின் இடையே தனது விரல்களில் எதையோ தடவியதாகவும், அது என்ன என்பது பற்றியும் விவாதத்தைத் தூண்டி ஆஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் ஃபாக்ஸ் கிரிக்கெட் சர்ச்சையாக மாற்றினர். 


ஜடேஜா விரல்களில் தேய்ப்பது என்ன?


ஜடேஜா தனது சக வீரர் முகமது சிராஜிடம் இருந்து எதையோ பெற்றுக் கொண்டு அதை தனது இடது கை ஆள்காட்டி விரலில் தேய்ப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்னுடன் ரசிகர் ஒருவர் அந்தக் காட்சியைப் பகிர்ந்து கொண்டபோது, அதற்கு அவர் "சுவாரஸ்யம்" என்று பதிலளித்தார்.


இதேபோல், இங்கிலாந்தின் மைக்கேல் வாகன்,  "ஜடேஜா தனது சுழலும் விரலில் என்ன வைக்கிறார்? இதை ஒருபோதும் பார்த்ததில்லை." என குறிப்பிட்டார். இப்படி விஷயங்கள் வலுக்க, பல ஆஸ்திரேலிய ஊடகங்கள் அதனை க்ரிப்பிங் க்ரீம் என்று செய்திகள் வெளியிட்டனர். அதனை பந்து முழுவதும் தடவுகிறார் என்றும், அதன் மூலம்தான் பந்தை டர்ன் செய்கிறார் என்றும் செய்திகள் பரபரப்பாக வெளிவந்தன.






சர்ச்சைக்கு பதில்


வீடியோ காட்சிகளில் ஜடேஜா தனது 16வது ஓவரை வீசத் தயாராகிறார், அப்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது, மேலும் சிராஜின் கையிலிருந்து மென்மையான பொருளை வாங்கி, இடது கை ஆள்காட்டி விரலில் தேய்க்கிறார். பிறகு இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, விக்ராந்த் குப்தா என்னும் ஒரு பத்திரிகையாளர், ஜடேஜா "வலி நிவாரணி ஆயின்மெண்ட்டை" விரல்களுக்கு தடவுவதாக இந்திய முகாம் கூறியதாக தெரிவித்தார்.



பிட்ச்-டாக்டரிங் சர்ச்சை


ஏற்கனவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தியாவை "பிட்ச்-டாக்டரிங்" செய்துள்ளது என்று குற்றம் சாட்டி வந்தனர்.  மைதான ஊழியர்கள் ஒரு பக்க பிட்ச்சை மட்டும் உலர்த்தியது போல் தோன்றியதாக கூறினர். ஏனெனில் இந்தியாவின் டாப் ஆர்டர் முழுக்க முழுக்க வலது கை ஆட்டக்காரர்கள், அதேசமயம் ஆஸ்திரேலியாவில் நான்கு இடது கை வீரர்கள் இருப்பதால் இப்படி செய்ததாக குறிப்பிட்டனர். அதனால் இந்த தொடரே சர்ச்சைக்குரிய சூழ்நிலையில்தான் தொடங்கியது.






முதல் நாளை வென்ற இந்திய அணி


ஆஸ்திரேலியாவை 177 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் காம்போ அஸ்வின் -ஜடேஜா 8 விக்கெட்டுகளை இணைந்து வீழ்த்தினர். தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் வெளியேற, ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. முதல் இரண்டு விக்கெட்டுகளை சிராஜும், ஷமியும் எடுக்க, அடுத்தடுத்து ஸ்பின்னர்கள் தங்கள் தாக்குதலை தொடங்கினர். குறைந்த ரன்னிலேயே ஆஸ்திரேலியாவை மடக்கி, நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. 


ஜடேஜா 47 ரன்கள் கொடுத்து, நிலைத்து ஆடிய மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் மதிப்புமிக்க விக்கெட்கள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் அஷ்வினின் 450வது டெஸ்ட் விக்கெட் உட்பட மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு அந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்தியர் இவராவார்.


தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா அதிரடி காட்ட, கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். அதிரடி காட்டிய ரோகித் அரைசதம் கடந்து களத்தில் உள்ள நிலையில், நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நாளில் மீதம் ஓரிரு ஓவர்களே இருந்த நிலையில், நைட் வாட்ச்மேனாக அஸ்வின் இறங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.