ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலகத் தொடர் 2022 இன் இறுதிப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் இலங்கை லெஜண்ட்ஸை 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் கோப்பையை வென்றது. 


முதலில் டாஸ் வென்ற இந்திய லெஜெண்ட்ஸ் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர்-பேட்டர் நமன் ஓஜா, சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர். 






முதல் பந்தில் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் ஓரிரு பந்துகள் மட்டுமே நீடித்து 4 ரன்களில் வெளியேறினார். இருப்பினும், நமன் ஓஜா மறுபுறம் நங்கூரம் போல் நச்சென்று நின்று தேவையான நேரத்தில் பவுண்டரிகளை விளாசினார். 


 இந்தியா நம்பர் 4 வது வீரராக களமிறங்கிய வினய் குமார் ஆரம்பம் முதலே ஹிட்டராக தனது ஆட்டத்தை தொடங்கினார். 


இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தபோது, நமன் ஓஜா தனது இரண்டாவது தொடர்ச்சியான அரை சதத்தை கடந்து அசத்தினார். வினய் குமார் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, யுவராஜ் சிங்கை கிரீஸுக்குள் வந்து19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்ததால், ஓஜா சற்று தடுமாறினாலும் பின்னர் டீப் மிட்விக்கெட்டில் ஒரு அற்புதமான சிக்ஸருடன் சதம் அடித்து மிரட்டினார். ஸ்டூவர்ட் பின்னி கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்து இந்தியாவை 195 ரன்கள் தொட உதவி செய்தார். 


196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை லெஜெண்ட்ஸ் அணி, ஆரம்பத்திலேயே சனத் ஜெயசூர்யா மற்றும் டில்ஷான் முனவீர ஆகியோரை இழந்தது. அடுத்து வந்த கேப்டன் தில்சன் மற்றும் உபுல் தரங்காவும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 






ஒரு கட்டத்தில் இலங்கை அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓரளவு தாக்குபிடித்து ஆடிய  இஷான் ஜெயரத்னே 22 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆக, மற்ற வீரர்கள் வேகமாக வெளியேறினர். 18.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய லெஜெண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரோடு சேப்டி கோப்பையை கைப்பற்றியது. 


71 பந்துகளில் 108 ரன்கள் குவித்த நமன் ஓஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் ஆட்டநாயகனாக தில்சன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.