இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட். இவர் கடந்தாண்டு நடந்த கார் விபத்தில் சிக்கி மோசமாக காயம் அடைந்தார். அதன்பின்பு அவரது உடலில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. விபத்தில் சிக்கிய ரிஷப்பண்ட் இதன்பின்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடமால் இருந்தார்.


கம்பேக் தரும் ரிஷப்பண்ட்:


இதன்பின்பு, மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வந்த ரிஷப்பண்ட் இந்தாண்டு இறுதியில் கிரிக்கெட் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் முழு உடல் தகுதி எட்டாத காரணத்தால் அவரால் இந்தாண்டு நடந்த எந்த தொடரிலும் விளையாட முடியவில்லை. இந்த நிலையில், ரிஷப்பண்ட் முழு உடற்தகுதி எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதையடுத்து, அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடர் மூலமாக மீண்டும் ரிஷப்பண்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தொடரில் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடற்தகுதி:


கடந்த சில நாட்களாக ரிஷப்பண்ட் பொதுவெளியில் நலமாக வரும் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. விரைவில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் தனது உடல்தகுதியை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப்பண்ட் ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது.


டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் சிறப்பாக ஆடக்கூடிய ரிஷப்பண்ட் விபத்திற்கு பிறகு, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆடவில்லை. ரிஷப்பண்ட்டின் பிசியோதெரபிஸ்ட் அவர் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வரும் ஐ.பி.எல். தொடரில் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு திரும்புவார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


26 வயதான ரிஷப்பண்ட் 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 11 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 271 ரன்களும், 30 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதத்துடன் 865 ரன்களும், 66 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதத்துடன் 987 ரன்களும் எடுத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை  வகித்துள்ள ரிஷப்பண்ட் இதுவரை 98 ஐ.பி.எல், போட்டிகளில் ஆடி 1 சதம் 15 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 838 ரன்களை எடுத்துள்ளார்.


மேலும் படிக்க: Google Virat Kohli: கூகுள் வயசு 25 - வரலாற்றுப் பெருமையை பெற்ற விராட் கோலி! இதை படிங்க முதல்ல...!


மேலும் படிக்க: IPL Auction 2024: ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? வெறும் 3 பேருக்குதான் ரூ.2 கோடி அடிப்படை தொகை