Google Virat Kohli: கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், அதன் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.


கூகுளில் கோலி முதலிடம்:


கடந்த 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேடுபொறி நிறுவனமான கூகுள், 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக டிவிட்டர் தளத்தில் அந்நிறுவனம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், கடந்த 2.5 தசாபதங்களில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் பிரிவில் அதிகம் தேடப்பட்ட நபராக இந்திய வீரர் கோலி இடம்பெற்றுள்ளார். இதோடு, அதிகம் தேடப்பட்ட வீரர் என்ற பிரிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி ஹார்டின், அதிகம் தேடப்பட்ட பொம்மை பார்பி, அதிகம் தேடப்பட்ட சூப்பர் ஹீரோ பிரிவில் ஸ்பைடர் மேனும் உள்ளன இதேபோன்று பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.






கோலியின் சாதனைகள்:


2008ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கவனம் ஈர்த்தார். இதையடுத்து சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய கோலி, பேட்டிங்கில் அதகளம் செய்தார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து, ரன் மெஷின் என வர்ணிக்கப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றார். கிரிக்கெட் உலகில் தகர்க்கவே முடியாது என கருதப்பட்ட பல சாதனைகளை தவிடுபொடியாக்கினார். ஒருநாள் போட்டியில் 50 சதங்களை விளாசியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம், கிரிக்கெட் உலகின் கிங் என வர்ணிக்கப்பட்டு வருகிறார்.


”ரன் மெஷின்” கோலி: 


விராட் கோலி இதுவரை இந்தியாவிற்காக 111 டெஸ்ட், 292 ஒருநாள் போட்டிகள்,  மற்றும் 115 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 80 சர்வதேச சதங்கள் உட்பட முறையே, ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டிலும் 8 ஆயிரத்து 676 ரன்கள், 13 ஆயிரத்து 848 ரன்கள் மற்றும் நான்காயிரத்து 8 ரன்கள் குவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியிலும் 11 போட்டிகளில் களமிறங்கி 765 ரன்கள் சேர்த்தார்.