2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் பெங்களூருவில் நடந்து முடிந்தது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் என ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட 4 வீரர்களை தவிர்த்து 21 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. மொத்தம் 25 வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இளம் வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால், ஐந்தாவது முறையாக U19 உலகக்கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி. வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சில வீரர்கள் ஐபிஎல் ஏலத்தின்போது கவனிக்கப்பட்டனர். அந்த வரிசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல்ரவுண்டர் ராஜவர்தன் ஹங்கர்கேகர் என்ற வீரரை 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்நிலையில், ராஜவர்தன் ஹங்கர்கேகர் வயது முறைகேடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓம்பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். ராஜ்வர்தனுக்கு 21 வயதை நிரூபிக்கும் வகையில் தக்க ஆதாரங்களுடன் பிசிசிஐயிடம் புகார் அளித்திருக்கிறார். 7வது வகுப்பு படிக்கும் வரை தான் 2001-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பிறந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். 8வது வகுப்பிற்காக சேரும் போது தன்னுடைய பிறந்த தேதியை நவம்பர் 10, 2002 என மாற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
U19 உலகக்கோப்பையில் ராஜவர்தன் சிறப்பாக விளையாடியதால், ஐபிஎல் ஏலத்தின்போது சென்னை அணி அவரை வாங்கியது. இந்நிலையில், வயது முறைகேடு செய்திருப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகத்தை அளிக்கிறது. மேலும், விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்