சர்வதேச அளவில் கிரிக்கெட் மீதான மோகத்தினை அதிகப்படுத்திய அணி என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் அணிதான். அந்த அணி குறித்து இன்றுவரை உள்ள பொதுவான அபிப்ராயம் “ வெஸ்ட் இண்டீஸ் டீம்லதான் 11 பேரும் பேட்ஸ்மேன்ஸ்” என்பதுதான். ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் ஒரு அணி வெற்றி பெற கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் தேவை என்றால் அணியில் இருக்கும் முக்கிய விக்கெட்டுகள் அனைத்தும் வீழ்த்தப்பட்ட பின்னரும் கடைசி விக்கெட்டாக களத்தில் ஏதேனும் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் இருந்தால் அவரால் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட முடியும் என்ற நம்பிக்கை தானாக எழுந்தி விடுகின்றது. இப்படியான நம்பிக்கையை ஏற்படுத்தும் அணி வீரர்களால் ஒரு அணியாக தற்போது சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிலும் சர்வதேச போட்டியோ அல்லது ஐசிசி போட்டிகளோ வெஸ்ட் இண்டீஸ் அணி மீது மற்ற அணிகளுக்கு உள்ள எண்ணம், டி20 போட்டி என்றால் அதிக கவனம் தேவை. அதுவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என்றால் நாமெல்லாம் எதுவும் செய்யத்தேவையில்லை, அவர்களே நமக்கு வெற்றியை பெற்றுத்தந்துவிடுவார்கள் எனும் அளவிற்கு இவர்களது ஆட்டம் உள்ளது. 


அதேபோல் கிரிக்கெட்டில் கடந்த சில சதாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் அணி ஆஸ்திரேலியா. இந்த அணி தனது நாட்டில் மட்டும் இல்லாமல் உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கோப்பையை தட்டி வரும் வல்லமை படைத்தவர்களாக உள்ளனர். 


இப்படியான ஆஸ்திரேலியா அணியின் சொந்த மண்ணில் அவர்களை 27 ஆண்டுகளுப் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அட்டவணைப் படுத்தப்பட்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. 


ஆஸ்திரேலியா அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது, பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு. அதாவது அஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, டிக்ளேர் செய்தார்.  அப்போது ஆஸ்திரேலியா அணியின் கைவசம் ஒரு விக்கெட்டும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 40 நிமிடங்களும் மீதம்மிருந்தது. இதுமட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 22 ரன்கள் பின் தங்கியிருந்தது. டிக்ளேர் செய்ததற்கு கம்மின்ஸ் சொன்ன காரணம், அடுத்த இரண்டு நாட்களில் வானிலை ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவனுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்தார். குறிப்பாக இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சாளர்கள் எளிதில் விக்கெட்டுகள் வீழ்த்துவார்கள் எனவும் தெரிவித்தார். அவர் கூறியதைப் போல் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் எளிதில் விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி  வெற்றி பெற 216  ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கியது. ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்த ஆடுளம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கும் கைகொடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியதால், இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இரண்டு இன்னிங்ஸிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என ஆதிக்கம்  செலுத்தியிருந்தாலும், ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, முதல் இன்னிங்ஸில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவுதான் காரணம் என கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு ஆஷஷ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுபோன்ற முடிவை எடுத்தது  இங்கிலாந்து தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகின்றது.