IND Vs Aus Final: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முக்கிய காரணங்களில் பேட்டிங் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா:


45 நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வந்த கிரிக்கெட் திருவிழா, கோடிக்கணக்கான இந்தியர்களின் ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களிலேயே, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இதனால், இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்நோக்கி இருந்த கோடிக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


ஏமாற்றமளித்த டாப் - ஆர்டர்:


ரோகித் சர்மா வழக்கம்போல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். கோலி மற்றும் கே.எல். ராகுல் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். ஆனால், டாப் ஆர்டரில் முக்கிய வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை பறிகொடுத்தது தான், இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்களது பங்கிற்கு தலா 30+ ரன்கள் அடித்து இருந்தாலே, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி தந்திருக்க முடியும். 


பவுண்டரிகளுக்கு வந்த பஞ்சம்:


நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி அடித்த ரன்களில் சுமார் 50% பவுண்டரிகளில் தான் வந்தது. அந்த அளவிற்கு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆனால், நேற்றைய போட்டியில் ஸ்லோவர் பந்துகளை கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய வீரர்கள் துல்லியமாக திணறடித்தனர். ஒரு கட்டத்தில் சுமார் 27 ஓவர்களுக்கு இந்திய அணியால் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியாமல் போனது. மொத்தமாகவே இந்திய அணி சார்பில் 13 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. ரோகித் சர்மாவை தவிர எந்த ஒரு வீரரும், ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை.


மிடில் ஆர்டரின் மந்தமான ரன் சேர்ப்பு:


ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற போது, ஸ்கோர் போர்ட் 5-3 என வந்தாலும் மிடில் ஆர்டர் நிலைத்து நின்று ஆடி அணியை காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார். நேற்றைய போட்டியில் 81-3 என்ற நிலை வந்த போது, 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கோலி - கே.எல். ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்களின் முக்கிய குறிக்கோள் விக்கெட் இழப்பதை தவிர்ப்பதாக இருந்ததே தவிர, ரன் சேர்ப்பது என்பது இல்லாமல் போனது. குறைந்தபட்சம் ஓவருக்கு ஒரு பவுண்டரி வந்திருந்தாலும் இந்திய அணி ஒரு வலுவான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்து இருக்கக் கூடும். ஆனால், அவர்கள் அதை நிகழ்த்த தவறிவிட்டனர்.


சூர்யகுமார் யாதவ் / ஜடேஜா செய்தது தவறு?


கோலி ஆட்டமிழந்த பிறகு 5வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா களத்திற்கு வந்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜடேஜா நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி இருப்பதால், அவர் ரன் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 22 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 9 ரன்கள மட்டுமே அவர் சேர்த்தார். டெத் ஓவர்களில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 18 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றமளித்தார்.


ஆஸ்திரேலியாவின் அபாரமான பீல்டிங்:


உண்மையில் பார்த்தால் இந்திய அணி எளிதாகவே 270 ரன்களை இந்த போட்டியில் கடந்து இருக்கும். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் பவுண்டரி எல்லையில் தங்களது உடலையே தடுப்பாக பயன்படுத்தி, 30 ரன்களுக்கும் மேலாக அணிக்கான சேமித்தனர். அவர்களது அபாரமான பீல்டிங் தான் இந்திய அணி பேட்ஸ்மேன்களை சில மோசமான ஷாட்களை ஆடும் நிலைக்கு தள்ளி, பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தது.


சோபிக்க முடியாமல் போன சுழற்பந்து வீச்சு:


இறுதிப்போட்டிக்கு முன்பு வரையிலான 10 போட்டிகளிலும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தவறியதே இல்லை. ஆனால், நேற்றைய போட்டியில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 10 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனது பெரும் பின்னடைவாக கருத முடிகிறது.