சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா 17 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார். ரவீந்திர ஜடேஜா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ரவீந்திர ஜடேஜா முழு உடல் தகுதியுடன் இல்லை என்று இந்திய அணியின் தேர்வாளர்கள் கருதுகின்றனர்.


ஜடேஜா உடல்தகுதி:


பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளார். ஆனால், இதற்கு பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, ரவீந்திர ஜடேஜா குறைந்தபட்சம் ஒரு ஹோம் மேட்ச்சில் விளையாட வேண்டும் என்று கேட்டு கொண்டது.


ஜடேஜா உண்மையில் உடல் தகுதியுடன் இருந்தால், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாகவும், ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பும் ஜடேஜா குறைந்தது ஒரு இன்னிங்ஸில் 30 முதல் 35 ஓவர்கள் வீச வேண்டி இருக்கும். எனவே, ஜடேஜா குறைந்தபட்சம் ஒரு சொந்த மண்ணில் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


சவுராஷ்ட்ரா கேப்டன்:


இதனால், தமிழ்நாடு அணிக்கு எதிராக (நாளை) ஜனவரி 24ம் தேதி ரவீந்திர ஜடேஜா, சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது. 






இந்தநிலையில்,சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் இல்லாத நிலையில், ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணை கேப்டனாக அர்வித் வஸவதா அறிவிக்கப்பட்டுள்ளார். 


தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ரவீந்திர ஜடேஜா சென்னை வந்தார். அவட் சென்னை வந்ததை அறிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வணக்கம் சென்னை’ என பதிவிட்டு இருந்தார். 






சவுராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர்களான உனத்கட் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் எதிர்வரும் போட்டிகளை மனதில் கொண்டு ஓய்வு எடுத்துள்ளனர். 


ஜடேஜாவின் காயம்:


கடந்த ஆகஸ்ட் மாதம் முழங்கால் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடர், வங்கதேச தொடர், இலங்கை தொடர், நியூசிலாந்து தொடர் அனைத்து தொடர்களிலும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  காயத்திலிருந்து மீள ஜடேஜா அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் பல மாதங்களாக ஓய்வில் இருந்தார். கடந்த 19ம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்ட ஜடேஜா, நாளை தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் களமிறங்குகிறார். இந்த போட்டியானது கடந்த 2018ம் ஆண்டு பிறகு ஜடேஜா களமிறங்கும் முதல் ரஞ்சிக் கோப்பை போட்டியாகும்.