நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக மத்திய பிரதேசம் சென்ற இந்திய அணி, இன்று காலை உஜ்ஜயினின் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் சில இன்று அதிகாலை மகாகாலேஸ்வர் கோயிலை அடைந்து பிரார்த்தனை செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தங்கள் அணி வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகாலேஸ்வரரை பிராத்திக்கிறோம். அவரது மறுபிறவி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை நாங்கள் ஏற்கனவே வென்று விட்டோம். அவர்களுக்கு எதிரான மூன்றாவது போட்டியையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்ய முயற்சி செய்வோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து மகாகாலேஸ்வர் கோயிலில் அதிகாலை வேளையில் நடைபெற்ற சிவபெருமானின் ‘பஸ்ம ஆரத்தி’யில் இந்திய வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். அந்த பகுதியின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து கடவுளிடம் ரிஷப் பண்ட்க்காக பிரார்த்தனை செய்தனர்.
நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா?
மத்திய பிரதேசம் ஹோல்கர் மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இரு அணிகளுக்கு மோதிய இரண்டு ஒருநாள் போட்டியையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தை இழந்த நியூசிலாந்து:
இந்த போட்டி முடிவடைந்ததும் ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டது. தொடரை இழந்ததால் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 2 புள்ளிகள் சரிந்து 113 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு சென்றது. அதன்படி, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா அணி தலா 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளனர். 112 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளனர்.
தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா 100 புள்ளிகளுடன் 6வது இடம், வங்கதேசம் 95 புள்ளிகளுடன் 7வது இடம், இலங்கை 88 புள்ளிகளுடன் 8 வது இடத்திலும், தலா 71 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 9 மற்றும் 10 இடத்தில் உள்ளனர்.
இந்த தொடருக்கு முன்னதாக 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி கம்பீரமாக முதலிடத்தில் இருந்தது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்தியா 111 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் இருந்தனர்.
இதேபோல், கடந்த வாரம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது.
ஆஸ்திரேலியா தொடர்:
பிப்ரவரி 9ம் தேதி நாக்பூரில் தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா அணி களமிறங்குகிறது.
பார்டர்- கவாஸ்கர் டிராபி 2023 தொடர் இந்தியாவின் நான்கு வெவ்வேறு இடங்களில் இந்தாண்டு விளையாடப்பட இருக்கிறது. நாக்பூரில் உள்ள ஜம்தாவில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 9 முதல் 13 வரை முதல் டெஸ்ட் போட்டியும், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17 முதல் 21 வரை 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 1 முதல் 5 வரையிலும், நான்காவது டெஸ்ட் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9 முதல் 13 வரையிலும் நடைபெறவுள்ளது.