இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ பிளஸ், ஏ, பி. சி என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜா ஏ பிளஸ் வீரராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் ஏ பிரிவு வீரராக இருந்த கே.எல்.ராகுல் பி பிரிவிற்கு தரம் குறைக்கப்பட்டுள்ளார். இது அவருக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
தரம் உயர்ந்த ஜடேஜா:
இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக ஜடேஜா உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என இந்திய அணியின் அனைத்து வடிவ போட்டிகளிலும் முக்கிய வீரராக களமிறங்கும் ஜடேஜா முதன்மை ஆல்ரவுண்டராகவும் அசத்தி வருகிறார்,
சுழலில் சிக்கனமாகவும், விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்தி வரும் ஜடேஜா நெருக்கடியான நேரங்களில் பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக ஜடேஜா விளங்கினார் என்பது நாம் அறிந்ததே.
ஏ பிளஸ்
34 வயதான ஜடேஜா 2009ம் ஆண்டு முதன்முறையாக இந்திய அணிக்காக அறிமுகமானார். அப்போது முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் ஜடேஜா, தனது கேரியரில் இடைப்பட்ட காலத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும், சிறப்பான கம்பேக் கொடுத்த ஜடேஜா அபாரமான ஆட்டத்தால் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். தற்போது ஏ பிளஸ் வீரராக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளார்.
ஜடேஜா இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 18 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 658 ரன்கள் எடுத்துள்ளார். 174 ஒருநாள் போட்டிகளில் ஆடி 13 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 526 ரன்கள் எடுத்துள்ளார். 64 டி20 போட்டிகளில் ஆடி 457 ரன்களும் எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாளரான ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 264 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 191 விக்கெட்டுகளும், டி20யில் 51 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
கே.எல்.ராகுல் பரிதாப நிலை:
ஜடேஜாவின் நிலை இப்படியிருக்க, கே.எல்.ராகுல் நிலை வருந்தும் வகையில் அமைந்துள்ளது. இந்திய அணிக்குள் வந்தபோது அவர் ஆடிய விதம் நிச்சயம் தவிர்க்க முடியாத வீரராக உலா வருவார் என்று எண்ண வைத்தது. அதற்கேற்பவே அவரும் ஆடினார். ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அவர் இந்திய அணிக்காக ஆடும் விதம் அவரது பேட்டிங் பார்ம் மட்டுமின்றி பிளேயிங் லெவனில் அவரது இடம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
தொடக்க வீரராக ஏராளமான வாய்ப்புகளை பெறும் அவரது இடத்தில் அவரை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சுப்மன்கில் சிறந்த தேர்வாக மாறிவிட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன்கில், இஷான்கிஷான் ஜோடியை பட்டை தீட்ட வேண்டியது அவசியம் ஆகும். தொடர்ந்து மோசமான பார்மை வெளிப்படுத்தி வரும் கே.எல்.ராகுல் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பை வகித்தும் அவர் தற்போது ஏ பிரிவில் இருந்து பி பிரிவுக்கு தகுதிகுறைப்பு செய்யப்பட்டுள்ளார். இது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
கம்பேக் தருவாரா?
30 வயதான கே.எல்.ராகுல் இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 சதம், 13 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 642 ரன்கள் எடுத்துள்ளார். 54 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 13 அரைசதங்களுடன் 1985 ரன்கள் எடுத்துள்ளார். 72 டி20 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 22 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 265 ரன்கள் எடுத்துள்ளார். சமீபகாலமாக அவரது பேட்டிங் மோசமாக உள்ள நிலையில், அவர் பி பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் தன்னை நிரூபிக்க வேண்டுமென்றால் வரும் ஐ.பி.எல். தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.