கிரிக்கெட் அணிகளிலே குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த அணியென்றால் ஆப்கானிஸ்தான் அணிக்குத்தான் முதலிடம். அந்த நாட்டில் உள்ள நெருக்கடியான சூழலிலும், அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் எந்த வடிவ போட்டியாக இருந்தாலும் அசாத்தியமான திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை வாரி சுருட்டி அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி நேற்று மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.




இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடலாம் என்ற உத்வேகத்துடன் ஆப்கன் களமிறங்கியது. அதேசமயம் தொடரை இழந்துவிடக்கூடாது என்று பாகிஸ்தான் களமிறங்கியது. ஷதாப்கான் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் சையீம் டக் அவுட்டாகினார். அடுத்து வந்த ஷஃபீக் கோல்டன் டக் ஆகினார். முதல் ஓவரிலே 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர முகமது ஹாரிஸ் 15 ரன்களில் அவுட்டாக 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.


அடுத்து வந்த தையீப் தாஹிர் 13 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த அசாம்கானும் 1 ரன்னில் அவுட்டாக 10 ஓவர்களில் 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இமாம் வாசிம் – ஷதாப்கானும் ஜோடி சேர்ந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து தடுமாறியதால் பாகிஸ்தான் அணி நிதானமாக ரன் சேர்க்கத் தொடங்கினர்.


கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினாலும் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்  இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இமாம் வாசிம் 57 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷதாப்கான் 25 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்திருந்தார்.





இதையடுத்து, 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கானி 7 ரன்களில் அவுட்டானார். ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த குர்பாஸ் – இப்ராஹிம் ஜோடி நிதானமாக ஆடியது. ஆப்கானிஸ்தான் அணி 86 ரன்கள் இருந்தபோது குர்பாஸ் 49 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் 38 ரன்களில் இப்ராஹிம் ஜட்ரான் அவுட்டானார்.


அடுத்து ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஜட்ரான் – முகமது நபி இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக ஜட்ரான் பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். ஆட்டத்தின் கடைசி ஓவர் சென்ற இந்த போட்டியில் ஒரு பந்துகள் மீதம் வைத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டபோது நஜிபுல்லா பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.முன்னதாக அந்த ஓவரின் முதல் பந்திலும் நஜிபுல்லா சிக்ஸர் அடித்து அசத்தியிருந்தார்.


19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது. ஜட்ரான் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23 ரன்களுடனும், முகமது நபி 9 பந்துகளில் 1 சிக்ஸருடன் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.