இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. காயம் காரணமாக அணியில் இருந்து விலகியிருந்த ஜடேஜா ஆசிய கோப்பைத் தொடர் மூலமாக மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இந்த நிலையில், ஆசிய கோப்பையின் லீக் தொடரின்போது, ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஜடேஜாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால், ஜடேஜா மிகுந்த அவதிக்குள்ளானார். ஜடேஜாவிற்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை காரணமாக அவர் ஆசிய கோப்பைத் தொடரில் இருந்து பாதியிலே விலகினார். அவருக்கு பதிலாக அணியில் அக்ஷர் படேல் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், காயத்தால் பாதிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவிற்கு இன்று பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க உதவிய அனைவருக்கும் ஜடேஜா இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜடேஜா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜடேஜாவிற்கு ரசிகரகள் வாழ்த்து கூறி வருகின்றனர். உலககோப்பை டி20 போட்டித்தொடர் ஆஸ்திரேலியாவில் இன்னும் ஒரு மாத இடைவெளியில் தொடர உள்ளது.
இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டராக இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. இக்கட்டான நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பவர் ஜடேஜா. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிந்தாலும், அடுத்த மாதம் தொடங்க உள்ள உலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றாலும், ஜடேஜா முழு உடல்தகுதியை எட்டுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் என்பது குறித்த முழு தகவல் வெளியாகவில்லை. ஜடேஜா முழு உடல்தகுதியை எட்டாவிட்டால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் யாரைச் சேர்ப்பது என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய ஜடேஜாவால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால், சூப்பர் 4 சுற்றில் ஜடேஜா இல்லாதது பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இந்திய அணியின் தோல்வியால் நன்றாகவே தெரிந்தது.