ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 ரன்கள் குவித்து தொடர்ச்சியாக 2வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன்காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.


இந்த நிலையில், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’வார்த்தை’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "உங்கள் மகிழ்ச்சிக்காக மகிழ்ச்சியாக இருப்பவர்களையும், உங்கள் சோகத்திற்காக வருத்தப்படுபவர்களையும் கவனியுங்கள். அவர்கள் உங்கள் இதயத்தில் சிறப்பு இடங்களுக்கு தகுதியானவர்கள்." என்று பதிவிட்டுள்ளார். 




முன்னதாக, பாகிஸ்தான் பேட்டிக்கு பிறகு விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் கடந்த 14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். என்னுடைய வேலை ஒன்றே ஒன்று தான். அது சிறப்பாக விளையாடி அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பது. எனக்கு கிடைத்த ஓய்வு அதை நன்றாக புரிய வைத்துள்ளது. மீண்டும் பழைய மாதிரி என்னுடைய கிரிக்கெட்டை நான் ரசிக்க தொடங்கிவிட்டேன். 






என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாதம் பேட்டை தொடாமல் இருப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனினும் அந்த ஓய்வு எனக்கு தேவைப்பட்டது. நீங்கள் எதற்காக கிரிக்கெட் விளையாட தொடங்கினீர்களோ அதை ஒரு சில நேரங்களில் மறக்க கூடும். அதை மீண்டும் ஞாபக படுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. அதை நிச்சயம் செய்ய வேண்டும். 


நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த போது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார். மற்றவர்கள் இடம் என்னுடைய நம்பர் இருந்தது. ஆனால் அவரை தவிர வேறு யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. என்னுடைய வாழ்க்கையை நான் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இது போன்ற விஷயங்கள் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று ” எனத் தெரிவித்திருந்தார்.