இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தவிர்க்க முடியாத இடத்தை தக்க வைத்திருப்பவர் ரவிசந்திரன் அஷ்வின். 35 வயதான ஆல்-ரவுண்டர் அஷ்வின், கடந்த 2018 – 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி சிந்தித்தாக தெரிவித்திருக்கிறார்.


பிரபல விளையாட்டு பத்திரிக்கையான க்ரிக் இன்ஃபோவுக்கு அளித்த பேட்டியில், ”காயம் ஏற்பட்டபோது யாரும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை, அதனால் கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெற நினைத்தேன்” என மனம் திறந்திருக்கிறார். 2017-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில், அடிக்கடி காயம் ஏற்பட்டதால் அவரது கிரிக்கெட் கரியரில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிட்டது.


இது குறித்து பேசி இருக்கும் அவர், “2018-2020 காலக்கட்டங்களில் நிறைய முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். காயம் ஏற்பட்டதனால் மட்டும் இந்த முடிவை எடுக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. எனக்கு காயம் ஏற்பட்டபோது யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் கரியரின் முக்கியமான அந்த தருணத்தில் நான் அணியில் இருக்க வேண்டுமென பலரும் நினைக்கவில்லை. மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு இப்போதும் உண்டு. இந்திய அணிக்காக பல முக்கிய போட்டிகளில் வெற்றியை பெற்று தந்திருக்கிறேன். ஆனால், என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என தோன்றுகிறது.



அப்போது, கிரிக்கெட்டை விட்டு வேறு பாதியில் பயணிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இருப்பினும் நான் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யலாம் என்று காயங்களில் மீண்டு வந்து மீண்டும் முயற்சி செய்து இந்திய டி20 அணியில் இடம் பிடித்தேன். எனக்கு இந்த காலங்களில் உறுதுணையாக இருந்தது என்னுடயை மனைவி மட்டும்தான். தற்போது கிரிக்கெட் விளையாடும் எண்ணத்தில் தான் இருக்கிறேன். அதற்காக ஒவ்வொரு தொடருக்கும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். இப்போது மீண்டு வந்திருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.


சவாலான கால கட்டங்களை சமாளித்து கிரிக்கெட்டில் தடம் பதித்த அஷ்வினுக்கு 2021-ம் ஆண்டு ஒரு கம்-பேக் ஆண்டாக இருந்திருக்கிறது. மீண்டும் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர், தனது இருப்பை உறுதிப்படுத்துவது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் விளையாடி வருகிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண