இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக சென்றுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி தொடங்க உள்ளது.


தென்னாப்பிரிக்க நாட்டில் இதுவரை இந்திய வீரர்கள் ஆடிய டாப் 10 சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களை கீழே காணலாம்.



  1. கபில்தேவ் – 129 ரன்கள் (1992)


1992-93ம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியபோது, கபில்தேவ் களமிறங்கினார். அவர் தனது பாணியில் தனி ஆளாக தென்னாப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தார். 180 பந்தில் 14 பவுண்டரி 1 சிக்ஸருடன் அவர் 129 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்த டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்து, தொடரையும் இழந்தது.





  1. சச்சின் டெண்டுல்கர்- 169 ரன்கள் (1996)


1996ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் தென்னாப்பிரிக்க முதல் இன்னிங்சில் 529 ரன்களை குவிக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் 58 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அசாரூதினுடன் ஜோடி சேர்ந்து சச்சின் இந்திய அணியை மீட்டார். இருவரும் இணைந்து 222 ரன்களை குவித்தனர். அசாரூதின் 115 ரன்களில் ஆட்டமிழக்க, தனி ஆளாக போராடிய சச்சின் டெண்டுல்கர் 10வது விக்கெட்டாக வெளியேறினார். அவர் 254 பந்தில் 26 பவுண்டரி 169 ரன்களை குவித்தார். இதனால், இந்திய அணி 359 ரன்களை எடுத்தது.





  1. முகமது அசாருதீன் -115 ரன்கள் (1996ம் ஆண்டு)


1996ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 169 ரன்கள் குவித்த அதே போட்டியில், தொடக்க வரிசை வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சச்சினுடன் கைகோர்த்த அசாரூதின் அதிரடியாக ஆடினார். ஷான் பொல்லாக், ஆலன் டொனால்ட் என்று அனைவரது பந்துவீச்சையும் வெளுத்த அவர் 110 பந்துகளில் 19 பவுண்டரி 1 சிக்ஸருடன் 115 ரன்களை குவித்து வெளியேறினார். சச்சினுடன் அவர் அமைத்த இரட்டை சத பார்ட்னர்ஷிப்பால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது.



  1. ராகுல் டிராவிட் – 148 ரன்கள் ( 1996ம் ஆண்டு)


1996ம் ஆண்டு சச்சின் தலைமையில் சென்ற இந்திய அணியில் இளம் வீரராக ராகுல் டிராவிட் இருந்தார். மூன்றாவது டெஸ்டில் தொடக்க வீரர்கள் விக்ரம் ரத்தோர், நயன் மோங்கியா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஒன்-டவுன் வரிசையில் இறங்கிய ராகுல் டிராவிட் அற்புதமான இன்னிங்சை ஆடினார். அவர் தனி ஆளாக களத்தில் நங்கூரமிட்டு 362 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரிகளுடன் 148 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ராகுல் டிராவிட்டின் முதல் டெஸ்ட் சதம் இதுவே ஆகும்.





  1. வீரேந்திர சேவாக் – 101 (2001ம் ஆண்டு)


2000-2001ம் ஆண்டு கங்குலி தலைமையில் சென்ற தென்னாப்பிரிக்க அணி, ப்ளூம்போன்டெயினில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. ராகுல் டிராவிட், லட்சுமண், கங்குலி அடுத்தடுத்து ஆட்டமிழக்க 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சேவாக் சச்சினுடன் கைகோர்த்தார். எப்பேற்பட்ட பந்துவீச்சாளரையும் பயமின்றி அடித்து ஆடும் சேவாக் இறங்கியது முதல் அடித்தும், பொறுப்புடன் ஆடினார். அவர் 173 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 105 ரன்களை விளாசினார். இந்த போட்டியில் இந்தியா தோற்றாலும், இந்திய அணியின் நட்சத்திரமாக சேவாக் உருவெடுத்தார்.





  1. சவ்ரவ் கங்குலி – 51 ரன்கள் ( 2006ம் ஆண்டு)


ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணியின் வாசிம் ஜாபர், சேவாக் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராகுல் டிராவிட் 32 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அணிக்கு திரும்பிய கங்குலி பொறுப்புடன் ஆடினார். லட்சுமண் 28 ரன்களுக்கும், தோனி 5 ரன்களுக்கும் வெளியேற இந்தியா 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கங்குலி மட்டும் ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் ஆடி 101 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் போட்டி அதுவே என்பது குறிப்பிடத்தக்கது.



  1. புஜாரா -153 ரன்கள் ( 2013-14ம் ஆண்டு)


2013ம் ஆண்டு இந்தியா அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களும், தென்னாப்பிரிக்க முதல் இன்னிங்சில் 244 ரன்களும் எடுக்க இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஷிகர் தவான், முரளி விஜயை அடுத்தடுத்து இழக்க விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்த புஜாரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிராவிட்டின் இடத்தை நிரப்ப தகுந்தவர் என்பதை நிரூபிக்கும் விதமாக 270 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 153 ரன்களை குவித்தார். விராட்கோலியும் 96 ரன்களும் குவித்ததால் இந்தியா இந்த போட்டியை டிரா செய்தது.



  1. விராட்கோலி -119 ரன்கள் ( 2013-2014ம் ஆண்டு)




தோனி தலைமையில் தென்னாப்பிரிக்க சென்ற இந்திய அணி ஜோகன்ஸ்பர்க்கில் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க விராட்கோலி மிகவும் பொறுப்பாக ஆடினார். ரஹானே 47 ரன்களில் ஆட்டமிழக்க கோலி மட்டும் 181 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 119 ரன்களை எடுத்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்சிலும் 96 ரன்கள் எடுத்து கோலி இந்தியா டிரா செய்ய உறுதுணையாக இருந்தார்.