சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். 


இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரவிசந்திரன் அஸ்வின் 24.81 சராசரியில் 26 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால், இந்த டெஸ்ட் தொடர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு எளிதாக அமையவில்லை, பல ஏற்ற இறக்கங்களை கண்டு சாதனையும், வேதனையையும் கொண்டார். ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது அஸ்வினின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது எனக்கு அனைத்து உதவிகளையும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாதான் செய்தார் என அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “அம்மாவை ஒருமுறை சென்னைக்கு சென்று பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. இதற்காக நான், எனது வீட்டிற்கு போன் செய்து அம்மா சுயநினைவோடு இருக்கிறீர்களா என்று கேட்டேன். அப்போது என் வீட்டார்கள் அம்மாவை மருத்துவர்கள் பார்க்கக்கூடாது என்று சொல்லுகிறார்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று சொன்னார்கள். 






நான் அழுதுகொண்டே வீட்டிற்கு செல்ல விமானத்தை தேடினேன். ஆனால், கிடைக்கவே இல்லை. ராஜ்கோட் விமான நிலையம் மாலை 6 மணிக்கு மூடிவிடுவார்கள். அதன்பின், காலைதான் திறப்பார்கள். அப்போதுதான், கேப்டன் ரோஹித் சர்மாவும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விஷயம் அறிந்து என்னிடம் வந்தார்கள். 


ரோஹித் உடனடியாக என்ன யோசிச்சுட்டு இருக்க..? உடனே கிளம்பு இந்த நேரத்தில் நீ குடும்பத்துடன் இருக்க வேண்டும். நான் உனக்கு ஏதாவது விமானம் அரேஞ்சு செய்து தருகிறேன் என்று சொன்னார். அதன்பிறகு நான் விமானத்தில் சென்றபோதும் கூட, கால் செய்து நான் நலமா, ஓகே வா என்று கேட்டுகொண்டே இருந்தார். 


அப்போதுதான் எனக்கு தோன்றியது! ஒருவேளை நானே கேப்டனாக இருந்திருந்தால் கூட, ஒரு வீரருக்கு இப்படி ஆகியிருந்தால் போயிட்டு வா என்று மட்டுமே சொல்லிருப்பேன். ஆனால், நான் என்ன பண்ணுகிறேன், எப்படி இருக்கிறேன் என்று தொடர்ந்து விசாரித்தார். 






நான் பல கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளேன். ஆனால், ரோஹித்திடம் என்னமோ இருக்கிறது. அவனின் நல்ல மனசுக்குதான் 5 ஐபிஎல் கோப்பையை அடித்துள்ளான். கடவுள் யாருக்கும் அவ்வளவு எளிதில் கொடுப்பதில்லை. ரோஹித் சர்மா தனக்கு கிடைத்ததை விட, இன்னும் அதிகமாக பெற வேண்டும், கடவுள் நிச்சயமாக அவருக்கு கொடுப்பார். இதுபோன்ற சுயநலமிக்க சமூகத்தில், பிறரது நலனைப் பற்றி நினைப்பது அரிது, ஆனால் ரோஹித் சர்மா அப்படிப்பட்டவர். தோனியும் இப்படி பட்டவர்தான், ஆனால், ரோஹித் தோனியை விட பத்து படி முன்னே எடுத்து வைக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது” என தெரிவித்தார்.