அசத்திய இந்தியா:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் மாயஜால சுழலில் வங்கதேச அணி சுருண்டது. அதன்படி இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினார்.


முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 133 பந்துகள் களத்தில் நின்று 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 113 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின், 21 ஓவர்கள் வீசினார். அதில், 88 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதோடு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.


செலபிரிட்டி சூப்பர்ஸ்டார்:


இச்சூழலில், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஒரு செலபிரிட்டி சூப்பர்ஸ்டார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், "டி திலீப் எங்களின் செலபிரிட்டி ஃபீல்டிங் பயிற்சியாளர் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்வேன். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் ஸ்லிப் கேட்சிங் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஸ்லிப் கேட்சிங் நாம் நினைப்பதை போல் எளிதான விஷயமல்ல.


கண் சிமிட்டும் நொடியில் நமது உடல், கைகள் மற்றும் மூளை ஆகிய பாலுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும். இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் சிறந்த ஃபீல்டராக உருவாகியுள்ளார். 2வது ஸ்லிப் திசையில் கே.எல் ராகுல் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரது இடத்திற்கு ஜெய்ஸ்வால் கொண்டு வரப்பட்டார். அது இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஷார்ட் லெக் திசையில் ஜெய்ஸ்வால் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இதற்கான முழு பாராட்டையும் டி திலீப்பிற்கு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.