சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார். 


சொந்த மண்ணில் அசத்திய அஸ்வின்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி, முதல்போட்டி இன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகியது.


ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக இன்றயை போட்டியின் மூலம் டெஸ்ட் அணிக்கு திரும்பினர். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி களமிறங்கியதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால், வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி தந்தனர். இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.


சென்னை டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா:


அடுத்த வந்த சுப்மன் கில் டக் அவுட் ஆகி ஆதிர்ச்சி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கிய கோலியும் சொற்ப ரன்களில் வெளியேறினார். 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ஹசன் மஹ்மூத் பந்து வீச்சில் அவுட் ஆனார். 


பொறுப்பாக விளையாடிய பந்த் 39 ரன்களில் வெளியேறினார். கே.எல். ராகுல் மீண்டும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக, ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


பவுண்டரி, சிக்ஸர் என அதிரடி காட்டிய அஸ்வின், தனது சொந்த மண்ணில் சதம் அடித்து அசத்தினார். அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்த ஜடேஜாவும் அரை சதம் அடித்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 339 ரன்களை எடுத்தது.


112 பந்துகளில் 102 ரன்களுடன் அஸ்வினும் 117 பந்துகளில் 86 ரன்களுடன் ஜடேஜாவும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


நஜ்முல் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி சமீபத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை விழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே உற்சாகத்தில் இந்தியாவை வீழ்த்த முனைப்பு காட்டி வருகிறது. வங்கதேச அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹசன் மஹ்மூத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.