Hasan Mahmud: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட 4 முக்கிய விக்கெட்டுகளையும் வங்கதேச வீரர் ஹசன் மஹ்முத் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதன்படி, இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், கோலி போன்ற முக்கிய வீரர்கள், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
டாப்-ஆர்டரை இழந்த இந்திய அணி:
இளம் வீரர் ஜெய்ஷ்வால் உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, வெறும் 6 ரன்களில் நடையை கட்டினார். சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே டக்-அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 9 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கோலி 6 ரன்களுக்கு அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். விபத்தில் சிக்கிய சுமார் 600 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களம் கண்ட ரிஷப் பண்ட், ஓரளவு பொறுப்புடன் ஆடி 39 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் மிரட்டிய ஹசன் மஹ்முத்:
இந்திய அணி முதலில் விழுந்த 4 விக்கெட்டுகளையும், 24 வயதே ஆன இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் தான் விழ்த்தியுள்ளார். 4 விக்கெட்டுகளையும் கேட்ச் முறையில் சாய்த்து, இந்திய அணியை தடுமாறச் செய்துள்ளார். துல்லியமான லைன் & லெந்த் மூலம், இந்திய வீரர்களை தடுமாறச் செய்து விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம், இந்திய அணி 96 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
யார் இந்த ஹசன் மஹ்முத்?
கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானதில் இருந்தே, இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் ரசிகர்கள் மற்றும் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வங்கதேச அணிக்காக விளையாடி வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் அவர் ரெட் பால் கிரிக்கெட்டில் இடம்பெற்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மஹ்முத் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை பதிவு செய்தார். வங்கதேசம் அந்த டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியதில் மஹ்முத் முக்கிய பங்கு வகித்தார். சென்னை டெஸ்டுக்கு முன்பு, அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 25 சராசரியில் 14 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 30 விக்கெட்டுகளையும் டி20 கிரிக்கெட்டில் 18 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.