இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக உலா வந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சாளராக மட்டுமின்றி ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தவர். 

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்தாண்டு ஓய்வு பெற்ற நாளில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

சிறப்பான நாள், சிறப்பு ஆரம்பம்.

ஒவ்வொரு  முடிவும் ஒரு புதிய தொடக்கத்தை கொண்டிருக்கும். ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால், பல்வேறு லீக் விளையாட்டுகள் பற்றி ஆராய்பவனாக எனது நேரம் இன்று தொடங்குகிறது. பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகளையும், உறவுகளையும் மிக முக்கியமான ஐபிஎல், பிசிசிஐ இதுவரை எனக்கு கொடுத்ததற்கு அனைத்து உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாக பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். 

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியில் தனது ஐபிஎல் கேரியரைத் தொடங்கி பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, ராஜஸ்தான் அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடி பின்னர் கடந்த சீசனில் சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார். தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். 

அஸ்வின் இதுவரை 220 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 187 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு அரைசதத்துடன் 833 ரன்கள் எடுத்துள்ளார். 

38 வயதான அஸ்வின் முதன்முதலில் 2009ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகியுள்ளார். அவரது கடைசி ஐபிஎல் போட்டி தன்னுடைய முன்னாள் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த மே 20ம் தேதி ஆடியது ஆகும். 

சென்னை அணி நிர்வாகத்துடன் மோதலா?

அஸ்வின் சென்னை அணிக்காக கடந்த சீசனில் ஏலத்தில் எடுத்தபோது, அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரால் மிகப்பெரிய அளவில் சென்னை அணிக்காக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அவரது சுழல் பெரியளவில் அணிக்கு பங்களிக்காத நிலையில், சென்னை அணியின் மற்ற வீரர்களும் சொதப்பியதால் தோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. 

மேலும், கடந்த ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே பற்றி அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கும் சென்னை அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது முதலே இவருக்கும் சென்னை அணிக்கும் இடையே புகைச்சல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில், திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். அஸ்வின் கடந்த சீசனுக்காக 9 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது அவருக்கு பதிலாக ரூபாய் 9 கோடி சென்னை அணி பர்ஸில் வரும் என்பதால் அவர்கள் வேறு ஒரு வீரரை ஏலத்தில் எடுக்கலாம். 

இந்திய அணிக்காக 2010ம் ஆண்டு முதல் ஆடி வரும் அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 200 இன்னிங்சில் பந்துவீசி 537 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 37 முறை 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் வீழ்த்தியுள்ளார். ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தியுள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் ஆடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஆல்ரவுண்டர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 14 அரைசதங்கள், 6 சதங்களுடன் 3 ஆயிரத்து 503 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 707 ரன்களும், டி20யில் 184 ரன்களும் எடுத்துள்ளார்.