Pujara: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் வெற்றிகளில் புஜாரா முக்கிய பங்கு வகித்துள்ளதாக, அலிசா ஹேலி பாராட்டியுள்ளார்.

டெஸ்டில் மிரட்டிய புஜாரா

இந்திய டெஸ்ட் க்ரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான புஜாரா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் அறிவித்தார். களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி, எதிரணி பந்துவீச்சாளர்களை சோர்வடைய செய்து இந்திய அணியின் வெற்றிக்கு பல முக்கிய சமயங்களில் உதவியுள்ளார்.  அதன்படி, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 43.60 என்ற சராசரியுடன் 7,195 ரன்களை சேர்த்துள்ளார்.  இதில் 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் 8வது இடத்திலும் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு தண்ணி காட்டிய புஜாரா

டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை புஜாரா ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்நாட்டு மைதானங்களில் 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து,  47.28 என்ற சராசரியில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 993 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அந்த அணிக்கு எதிராக 2,657 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் நாதன் லயன் ஆகிய ஆகச்சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டே, இந்த அபரிவிதமான பேட்டிங் திறனை ஆஸ்திரேலிய மண்ணில் வெளிப்படுத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் மண்ணில் ஆட்டமிழப்பதற்கு முன்பாக அவர் எதிர்கொள்ளும் பந்துகளின் எண்ணிக்கை சராசரியாக 126.5 ஆக உள்ளது. இதன் மூலம், 1990ம் ஆண்டு முதல் அந்நாட்டில் குறைந்தபட்சம் 15 இன்னிங்ஸ்களில் விளையாடிய 66 வெளிநாட்டு வீரர்களில் எவரும் படைத்திடாத சாதனையை படைத்துள்ளார். 2018-19ம் ஆண்டில் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றதற்கு, புஜாரா சேர்த்த 521 ரன்கள் மிக முக்கிய பங்கு வகித்தன. அந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 193 ஆகும். அந்த தொடரில் மட்டுமே அவர் ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 258 பந்துகளை எதிர்கொண்டார்.

ஒரே இன்னிங்ஸில் 500 பந்துகள்

2017ம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 200 ரன்களை சேர்த்து புஜாரா அசத்தினார். அந்த இன்னிங்ஸின் மூலம், ஒரு இன்னிங்ஸில் 500-க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்ட ஒரே இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 

புஜாராவை புகழ்ந்து தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி:

இந்நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆடவர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கின் மனைவியுமான அலெக்ஸ் ஹேலி புஜாராவை வெகுவாக பாராட்டியுள்ளார். தனியார் பாட்காஸ்டில் பேசிய அவர், “புஜாரா செய்ததை போன்ற செயல்களை செய்யும் அளவிற்கு என்னிடம் மன உறுதி இல்லை. அத்தகைய மன உறுதியை கொண்டிருப்பது என்பது மிகவும் முரட்டுத்தனமானது. ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்திய அணி இரண்டு முறை வென்றபோதும், புஜாரா மிக முக்கிய பங்கு வகித்தார். காரணம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பலனற்றதாக மாற்றியதோடு, துவண்டு போகவுவும் செய்து கடுமையாக உழைக்கச் செய்தார். 

”புஜாரா விக்கெட்டே வேண்டாம்”

அந்த நேரத்தில் தான் புஜாராவின் விக்கெட்டே வேண்டாம் என ஆஸ்திரேலிய அணி முடிவெடுத்ததாக கருதுகிறேன். அதன் பிறகு அவருடன் விளையாட வரும் மற்ற வீரர்களின் விக்கெட்டையே குறிவைத்தனர். காரணம் அவரை ஆட்டமிழக்கச் செய்வது என்பது மிகவும் கடினமானது என்பதை ஆஸ்திரேலிய அணி உணர்ந்தது. புஜாராவை போன்ற ஒரு வீரரை நாம் மீண்டும் பார்போம் என நான் நினைக்கவில்லை” என அலீசா ஹேலி பாராட்டியுள்ளார்.