இந்திய கேப்டன் விராட் கோலி டி-20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்த உலககோப்பையுடன் டி-20 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால், டி-20 ஆட்டங்களில் கேப்டனாக கோலிக்கு இன்றைய போட்டியே கடைசி போட்டி. இதனால், கோலியை வெற்றியுடன் கேப்டன்சியில் இருந்து விடைபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி.


இந்திய அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றிய இரு ஆட்டங்கள் நடைபெற்ற அதே துபாய் மைதானத்தில்தான் இன்று நமீபியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இந்த போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் கோலி பவுலிங் தேர்வு செய்தார்.



ஓப்பனிங் களமிறங்கிய நமீபியா பேட்டர்கள், நிதானமாக தொடங்கினர். ஆனால், ஷமி பவுலிங்கில் முதல் விக்கெட்டை இழந்த நமீபியா பேட்டர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக, ஜடேஜா, அஷ்வின் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகள் சரிந்தன. 16 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், 100 ரன்களை எட்டி இருந்த நமீபியா அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால், முழுமையாக 20 ஓவர்கள் விளையாடுவார்களா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை களத்தில் நின்ற நமீபியா வீரர்கள், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி வெற்றி பெற 133 ரன்கள் தேவைப்பட்டது


சேஸிங்கில் இந்தியா:


இந்திய அணிக்காக ஓப்பனிங் களமிறங்கிய ரோஹித், ராகுல் இணை ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. குறிப்பாக, அடித்து விளாசிய ரோஹித் ஷர்மா அரை சதம் கடந்து அசத்தினார். அதுமட்டுமின்றி, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்தும் புதிய மைல்கல்லை எட்டினார். இதனால், இந்திய அணி இலக்கை எளிதில் நெருங்கியது. 10வது ஓவரின்போது, 56 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஃப்ரைலிங்கின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.






ரோஹித்தை அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஒரு பக்கம் அவர் நிதானமாக பேட்டிங் செய்ய, இன்னொரு பக்கம் அரை சதம் கடந்து ராகுல் அசத்தினார். இதனால் 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 136 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. கேப்டனாக கோலியின் கடைசி டி-20 போட்டி வெற்றியில் முடிந்துள்ளது மட்டுமே இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரே ஆறுதலான விஷயம்.


இந்தியா- நமீபியா ஆட்டத்துடன் உலககோப்பை சூப்பர் 12 சுற்றின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த போட்டியுடன் உலககோப்பை தொடரில் குரூப் 1-ல் தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், குரூப் 2-ல் இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் வெளியேறுகிறது. அரையிறுதியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண