இந்திய அணியுடனான போட்டியில் முன்கூட்டியே மைதானம் பற்றி நன்றாக அறிந்துகொண்டேன் என தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் வான்டர் டுசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக இந்திய அணி வீரர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.
இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் என்ற கடின இலக்குடன் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் வான்டர் டுசன் 75 ரன்கள், டேவிட் மில்லர் 64 ரன்கள் விளாச 19.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனிடையே வான்டர் டுசன் 46 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் என 75 ரன்களை விளாசினார். முதலில் மெதுவாக ஆடிய அவர் டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்தவுடன் அதிரடி ஆட்டம் ஆடினார். போட்டிக்கு பின் பேட்டியளித்த வான்டர் டுசன், நான் பேட் செய்த போது இந்திய அணி வீரர் ஆவேஷ் கான் தனது அசத்தலான பந்துவீச்சால் என்னை மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளினார். ஆனால் டேவிட் மில்லரின் பேட்டிங் என்னை அதிரடி ஆட்டம் பக்கம் திருப்பியது.
கடந்த சில வருடங்களாக நான் ஒரு கேம்பிளானோட விளையாடி வருகிறேன். அதாவது என்னால் 40-50 பந்துகள் விளையாட முடிந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியதால் அந்த மைதானத்தில் எளிதாக ரன் குவிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டோம். அதனால் தான் எளிதாக வெற்றிப் பெற முடிந்தது என வான்டர் டுசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்