ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7:00 மணிக்கு தொடங்கியது. 


முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 211 ரன்கள் குவித்து 212 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்தது. 


இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக இஷான் கிஷன் 76 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 36 ரன்களும் எடுத்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ், பார்னல், நார்ஜெ மற்றும் பிரிட்டோரியஸ் தலா ஒரு விக்கெட்களை எடுத்து இருந்தனர். 


212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் பவுமா களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய 3 வது ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா 8 பந்துகளில் 10 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். 


டி காக்குடன் இணைந்த பிரிட்டோரியஸ் ஆரம்பம் முதல் அதிரடிகாட்ட, மறுபக்கம் டி காக் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி 4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது. 


ஹர்திக் பாண்டியா வீசிய 5 வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் பிரிட்டோரியஸ் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை பறக்க விட, அடுத்த ஓவர் வீசிய ஹர்சல் பட்டேல் பிரிட்டோரியசை க்ளீன் போல்ட் செய்தார். தொடர்ச்சியாக அக்சார் பட்டேல் வீசிய 9 வது ஓவரில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டி காக் 22 ரன்களில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 






வான்டர் டுசன் உடன் இணைந்த மில்லர் அதிரடியில் மிரட்ட தொடங்கினார். இந்திய பந்து வீச்சாளர்களின் பத்துகளை நாலாபுறமும் சிதறவிட்ட மில்லர் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 24 பந்துகளில் 56 ரன்கள் தேவையாக இருந்தது. 






அடுத்த ஓவர் வீசிய ஹர்ஷல் பட்டேல் பந்தில் வான்டர் டுசன் அடுத்தடுத்து 3 சிக்ஸர், 1 பௌண்டரியை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார்.18 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்றபோது, புவனேஸ்வர் குமார் வீசிய 18 வது ஓவரின் முதல் பந்தே மில்லர் சிக்ஸரை பறக்கவிட்டார். மில்லர் மற்றும் வான்டர் டுசன் ஜோடி 56 பந்துகளில் 105 ரன்கள் எடுத்திருந்தனர். 


தொடர்ச்சியாக இருவரும் அதிரடிகாட்ட தென்னாப்பிரிக்கா அணி 5 பந்து மிச்சம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண