ரஷித் கான்:


ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், சர்வதேச போட்டிகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல், பிபிஎல் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெறும், டி-20 லீக் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்தவகையில் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் டி-20 லீக் தொடரில் விளையாடி வரும் ரஷித் கான், டி-20 போட்டி வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.


500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை:


தென் ஆப்ரிக்கா டி-20 லீக்கில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரஷித் கான், பிரிடோரியா கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசி வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டி-20 போட்டிகளில் தனது 500 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து, 3 உலக சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி, டி-20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர், 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர்(24 வயதில்), குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் 3 சாதனைகளை படைத்துள்ளார்.






 


குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகள்:


முன்னதாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த த்வெயின் பிராவோ 526 டி-20 போட்டிகளில் விளையாடி 614 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இவர் 500 விக்கெட்டுகளௌ பூர்த்தி செய்ய, 458 போட்டிகளை எடுத்துக்கொண்டார். ஆனால், ரஷித் கான் வெறும் 371 டி-போட்டிகளிலேயே 500 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 91 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்டுகளையும், பிக் பேஸ் லீக்கில் 69 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பல்வேறு தொடர்களில் விளையாடும் ரஷித்


கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கிய ரஷித் கான், அதைதொடர்ந்து கரீபியன் பிரீமியர் லீக், பிக் பேஸ் லீக், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் தென் ஆப்ரிக்கா டி-20 லீக் என, உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி-20 தொடர்களிலும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் தற்போது குஜராத் அணியின் முக்கிய வீரராக, ரஷித் கான் விளையாடி வருகிறார்.


அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள்:


டி-20 போட்டிகளில் உலகளவில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில், பிராவோ மற்றும் ரஷீத் கானை தொடர்ந்து சுனில் நரைன் 474 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 466 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 436 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.