2024 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 41 முறை சாம்பியனான மும்பை அணியும், இரண்டு முறை சாம்பியனான விதர்பா அணியும் வருகின்ற மார்ச் 10ம் தேதி மும்பையில் உள்ள சின்னமான வான்கடே ஸ்டேடியத்தில் மோத இருக்கின்றன. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணி அரையிறுதியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியும், விதர்பா அணி அரையிறுதியில் மத்தியப் பிரதேசத்தை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 


இந்தநிலையில், ரஞ்சி வரலாற்றில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவை. 


இதுவரை, ரஞ்சி கோப்பையில் இரு அணிகளும் ஒரே மாநிலத்தில் இருந்து இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளது. 1971ல் முதல்முறையாக மகாராஷ்டிராவும் மும்பையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் அதே மாநிலத்தைச் சேர்ந்த இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன. இப்போது விதர்பாவும் மும்பையும் தங்கள் பெயரை வரலாற்றில் பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.






இந்திய மாநிலமான மகாராஷ்டிரா இந்திய உள்நாட்டு கட்டமைப்பில் மூன்று வெவ்வேறு கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் அணிகள் உள்ளன். மகாராஷ்டிராவிற்கு என தனியாக ஒரு அணி இருக்கும் நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்த மும்பை மற்றும் விதர்பா என மேலும் இரண்டு அணிகள் உள்ளன. 


மூன்று அணிகளை கொண்ட குஜராத்திலும் இதே நிலைமைதான். குஜராத்துக்கு சொந்தமாக அணிகள் இருந்தாலும், பரோடா மற்றும் சௌராஷ்டிரா என இரண்டு தனித்தனி அணிகள் உள்ளது. 


முதல் அரையிறுதியில் விதர்பா வெற்றி: 


இந்த சீசனின் முதல் அரையிறுதி ஆட்டம் விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதல் இன்னிங்சில் விதர்பா 170 ரன்கள் எடுத்தது. மோசமான தொடக்கத்தில் இருந்து மீண்டு விதர்பா இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக செயல்பட்டு 402 ரன்கள் குவித்தது. பதிலுக்கு, மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 252 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்களும் எடுத்தது. இதனால் விதர்பா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரஞ்சி டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. விதர்பா அணி சார்பில் யாஷ் ரத்தோர், கருண் நாயர், உமேஷ் யாதவ் மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.


இரண்டாவது அரையிறுதியில் மும்பை வெற்றி:


இந்த சீசனின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மும்பை அணி முதல் இன்னிங்சில் ஷர்துல் தாக்கூரின் உதவியுடன் 378 ரன்கள் குவித்தது. பதிலுக்கு தமிழக அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில்ம் இரண்டாவது இன்னிங்சில் 162 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் சதமும், முஷீர் கான் அரை சதமும் அடித்திருந்தனர்.