இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடடை 1-1 என சமன் செய்துள்ளது.
முதல் போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணி 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 18.1 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது இலக்கை துரத்திய வங்கதேச அணியின் இன்னிங்ஸின்போது சௌமியா சர்க்கார் விக்கெட் கீப்பரிடம் அவுட் ஆனார். இதற்கு ஆன் பீல்டில் இருந்த அம்பயரும் அவுட் கொடுத்தார். இதன் பிறகு வங்கதேச வீரர் சௌமியா சர்க்கார் DRS கேட்க, இது மூன்றாம் அம்பயரிடம் ரீயூவ்-க்கு சென்றது. இதை நீண்ட நேரமாக வீடியோ மூலம் ஆலோசனை நடத்திய மூன்றாம் அம்பயர் நாட் அவுட் என அறிவித்தார். மூன்றாம் நடுவரின் முடிவால் இலங்கை வீரர்கள் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது..?
வங்கதேச இன்னிங்ஸின் நான்காவது ஓவரின் முதல் பந்தில் சௌமியா சர்க்காருக்கு எதிராக கேட்ச் அவுட் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆன் பீல்டு அம்பயர் உடனடியாக அவுட் என்று அறிவித்தார். இதை எதிர்த்து சௌமியா மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தார். அப்போது, பந்து பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்ததுபோல் தெரிந்தது. ஆனால், பந்துக்கும் பேட்டுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று மூன்றாம் அம்பயர் அறிவித்தார். இருப்பினும், பந்து பேட்டின் மீது படும் சத்தம் ஸ்டம்ப் மைக்கில் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இலங்கை அணி கோபமடைந்தனர்.
அப்போது, 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த சௌமியா, அதன்பிறகு 22 பந்துகலில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 166 ரன்கள் இல்லை துரத்திய வங்கதேச அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. லிட்டன் தாஸ் மற்றும் சௌமியா சர்கார் இடையே முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. லிட்டன் தாஸ் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பிறகு நஜ்முல் (53), ஹரிடோய் (32) எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இலங்கை தரப்பில் 2 விக்கெட்களையும் பதிரனாவே எடுத்திருந்தார்.