இந்தியாவில் மிகவும் பழமையான உள்ளூர் போட்டி தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை தொடர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரஞ்சிக் கோப்பை தொடர் நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ரஞ்சிக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி ஒரு வீரர் டிரிபிள் செஞ்சுரி அடித்து அசத்தியுள்ளார். கொல்கத்தாவில் பீகார் மற்றும் மிசோரம் அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. அதில் முதலில் ஆடி வரும் பீகார் அணியில் சகிபுல் கனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் பீகார் சார்பில் சகிபுல் கனி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். அவர் 387 பந்துகளில் 300 ரன்களை கடந்து அசத்தினார். அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 341 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் 56 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து அசத்தினார். இறுதியில் பீகார் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்குஇ 685 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன்மூலம் ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி 300 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு மத்திய பிரதேச வீரர் அஜய் ரோஹேரா அறிமுக வீரராக களமிறங்கி 267 ரன்கள் எடுத்தார். அதுவே அறிமுக வீரராக ஒருவர் ரஞ்சிக் கோப்பையில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை தற்போது சகிபுல் கனி முறியடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்