2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் பெங்களூருவில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஐபிஎல் ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகாக விளையாடி வந்த ராகுல் திரிபாதியை சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி தேர்வு செய்திருக்கிறது. இந்நிலையில், 2021 ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது தோனி தந்த அறிவுரையைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
30 வயதான ராகுல் திரிபாதி, 2017-ம் ஆண்டு ரைசிங் பூனே ஜெயண்ட்ஸ் அணியில் எடுக்கப்பட்டார். தோனியின் தலைமையின் கீழ் இருந்த திரிபாதி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். 2020-ம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 2021 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் முக்கிய வீரராக இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 192 ரன்கள் குவித்தது சென்னை அணி. இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய கொல்கத்தா அணி, வெற்றி பெற திணறியது. எட்டாவதாக களமிறங்கிய திரிபாதி 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ராகுல் திரிபாதிக்கு தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியவில்லை. அடுத்து களமிறங்கிய பேட்டர்களும் அவுட்டாக, சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது!
இது குறித்து பேசிய அவர், “காயம் ஏற்பட்டதால் சற்று தாமதமாகவே பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டேன். என்னால் ரன் சேர்க்க முடியவில்லை. மிகவும் கடினமாக இருந்தது. நான் அவுட்டாகி வெளியேறும்போது என்னை தட்டிக்கொடுத்த தோனி பாய், ’இன்று உனக்கான நாள் இல்லை. ஆனால், 100% உன்னுடைய உழைப்பை தந்திருக்கிறாய்’ என சொன்னார். இறுதிப்போட்டியை இழந்ததால் நான் மிகவும் சோகத்தில் இருந்தேன். போட்டி முடிந்த பின்பும் சில நிமிடங்கள் பேசி தோனி பாய் என்னை தேற்றினார்” என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 40 லட்சம் ஆரம்ப விலையோடு பங்கேற்றிருந்தார். ஏலத்தின்போது, அவரது விலை ஏறிக்கொண்டே சென்றது. இறுதியில் 8.5 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை எடுத்தது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்