இந்தியா -நியூசிலாந்து மோதிய உலகக்கோப்பை அரை இறுதி போட்டியை பார்த்து விட்டு சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.


பல நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என குழந்தைகளின் கனவு இன்று நிறைவேறியதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மும்பை வான்கடை கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டி நடைபெற்றது.


இந்தப் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் நேரடியாக கண்டு களித்தனர். இந்தப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் அரை இறுதி போட்டியை பார்க்க சென்று இருந்த நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து விமானம் மூலம் சற்று முன் சென்னை வந்தடைந்தார்.


மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த ரஜினியின் தீவிர ரசிகைகளலான 11,வயதுடைய ஹாசினிகா மற்றும் இவரது தங்கை 9,வயதுடைய லட்சுமி ஸ்ரீ இருவரும் ரஜினிகாந்த்துக்கு ரோஜா பூ கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.


பல நாள் கனவு இன்று நிறைவேறியதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ”நூறு சதவிகிதம் கப்பு நமதே. இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமியால் தான் இந்தியா அரையிறுதியில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை இந்தியாவுக்குதான். இறுதிப்போட்டியில் இந்தியா நிச்சயம் வெல்லும்.” என கூறி விட்டு சென்றார்.