இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 






இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை 2022 போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டி ஆகஸ்ட் 28 அன்று நடைபெறுகிறது. அந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.


இருப்பினும், கொரோனா பரிசோதனைக்குப் பிறகு, மற்ற போட்டிகளில் டிராவிட் பயிற்சியாளராக பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் அவருக்குப் பதிலாக, பங்கேற்றுள்ளார். ஆசியக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, லக்ஷ்மண் இளம் இந்திய அணியுடன் அயர்லாந்திற்கு பயிற்சியாளராக பயணம் செய்திருந்தார். அதே நேரத்தில், டிராவிட் இங்கிலாந்திற்கு மூத்த அணியுடன் பயிற்சி செய்திருந்தார். ஆசியக் கோப்பைக்கு டிராவிட் இல்லை என்றால், லக்ஷ்மணே, பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக டிராவிட்டும் விலகினால், ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு மிக பெரிய பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.


இந்திய அணி, வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல உள்ளது. கோப்பையை தக்க வைக்க கடும் போட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய இடங்களுக்காக ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், தகுதிச் சுற்றுகள் முடிந்த பிறகு மூன்றாவது அணி முடிவு செய்யப்படும்.


ரோஹித் தலைமையிலான அணி, ஆசியக் கோப்பை 2022 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியின் காயம் காரணமாக விலகி உள்ளார்.