உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதே இல்லை என்கிற வரலாறு இரு தினங்கள் முன்பு முடிவுக்கு வந்தது. அக்டோபர் 24 அன்று துபாயில் நடந்த 20 ஓவர் 2021 டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இந்திய அணி 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் 13 பந்துகள் மீதம் இருக்கையிலேயே 152 ரன்களை அடித்து வெற்றிவாகை சூடியது. பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, மட்டையாளர்கள் முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம் உள்ளிட்டோர் தன்னம்பிக்கையுடன் விளையாடித் தங்கள் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர். அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும்போலவே இந்தப் போட்டியிலும் மைதானத்தின் தன்மை, டாஸ் முடிவு, வீரர்களின் செயல்பாடு, அணித் தேர்வு ஆகியவையே வெற்றி அல்லது தோல்விக்குக் காரணமாக அமைந்தன.



இந்த வெற்றியை, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் காஷ்மீரில் வசிக்கும் மக்கள் பலர் கொண்டாடியுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவியரும், ' ஷேர் - ஐ - காஷ்மீர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்' கல்லுாரியில் மாணவர்களும், பாக்., வெற்றியை கொண்டாடினர்.




 


மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 'வீடியோ' பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவ மாணவ - மாணவியர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 'ஸ்ரீநகரின் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்தனர்.





ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் லோன் "பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அவர்களுக்கு தேச பக்தியில்லை எனக் கருதினால், அவர்களின் மனதை மாற்ற வேண்டும். கடும் நடவடிக்கை எடுப்பதால் எந்த பலனும் ஏற்படாது." என்று கூறினார்.



இதே போல அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் நபீசா அட்டாரி. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், 'வாட்ஸ் ஆப்'பில், 'நாம் வெற்றி பெற்றுவிட்டோம்' என பதிவு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்தார். மேலும், வாட்ஸ் ஆப்பில் தன் 'ஸ்டேடஸ்' ஆக, பாக்., வீரர்களின் வெற்றிக் கொண்டாட்ட புகைப்படத்தையும் வைத்திருந்தார்; இது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நபீசா அட்டாரியை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நபீசா கூறியுள்ளதாவது: நான் இந்தியர்; இந்தியா மீது பெரும் பற்று வைத்து உள்ளேன். ஜாலிக்காக பதிவிட்ட விஷயம், விவகாரமாகி விட்டது, யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.