இந்திய கிரிக்கெட் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சிக்கு முன்பு இந்திய அணி சிறு சறுக்கல்களையும் சந்தித்து பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து வருகிறது. 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி அதலபாதாளத்திற்குச் சென்று மீண்டு வந்து உச்சத்திற்கு சென்ற ஆண்டு ஆகும்.
2007 டி20 உலகக்கோப்பை:
அந்தாண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் வங்கதேச அணியிடம் தகுதிச்சுற்றிலே தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், சச்சின், டிராவிட், கங்குலி என மூத்த வீரர்கள் முற்றிலும் ஒதுங்கி கொண்ட நிலையில், முற்றிலும் புது இளம் ரத்தங்களுடன் முதன்முறையாக நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.
இன்றைய ஜாம்பவான் வீரர்கள் தோனி, கம்பீர், உத்தப்பா, யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ரோகித் சர்மா, ஸ்ரீசாந்த் என பலரும் இளம் ரத்தங்களாக களமிறங்கிய தொடர் அது. லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடனான போட்டி கைவிடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியை பவுல் அவுட் முறையில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
அடுத்த சுற்றில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அனைவரும் ஆஸ்திரேலிய எளிதில் வென்று இறுதிப்போட்டிக்குச் செல்லும் என்று கருதிய நிலையில், அன்று உலக கிரிக்கெட்டை ஆண்டுகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. 2007ம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் இதே நாளில் இந்தியா – பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு யசுப் பதான் 15 ரன்களில் அவுட்டாக, உத்தப்பா 8 ரன்களில் அவு்டடடானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ்சிங் 14 ரன்களுக்கு அவுட்டாக, தனி ஆளாக கம்பீர் இந்திய அணியை தாங்கிப் பிடித்தார். அவர் 54 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 75 ரன்கள் எடுத்து அவுட்டாக கடைசி கட்டத்தில் ரோகித் சர்மா 30 ரன்கள் எடுப்பார். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 157 ரன்களை எடுத்தது.
பரபரப்பை ஏற்படுத்திய கடைசி ஓவர்:
158 ரன்கள் எடுத்தால் இந்தியாவை வீழ்த்தி முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றலாம் என்று பாகிஸ்தான் களமிறங்கியது. ஹபீஸ் 1 ரன்னுக்கு அவுட்டாக, கம்ரான் அக்மல் டக் அவுட்டாக தொடக்க வீரர் இம்ரான் நசீர் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரி, சிக்ஸர் விளாச 14 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்திருநு்த அவரை உத்தப்பா ரன் அவுட்டாக்கினார். யூனிஸ்கான் 24 ரன்கள் எடுக்க சோயிப் மாலிக் 8 ரன்களுக்கும், அதிரடி மன்னன் அப்ரிடி டக் அவுட்டாக பாகிஸ்தான் அணி தடுமாறியது.
ஆனால், அந்த அணியின் ஃபினிஷர் மிஸ்பா உல் ஹக் தனி ஆளாக போராடினார். நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய அவர் கடைசியில் சிக்ஸராக விளாச கடைசி ஓவரில் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தானுக்கு கோப்பை, எஞ்சிய ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியாவிற்கு கோப்பை என்ற சூழல் வரும். இதனால், ஆட்டம் பரபரப்பான சூழலுக்கு செல்லும்.
உலகக்கோப்பையை கையில் ஏந்திய இந்தியா:
யாரும் எதிர்பாராத வகையில் தோனி பந்தை ஜோகிந்தர்சர்மா கையில் தருவார். முதல் பந்தை ஒயிடாக அடுத்த பந்தில் ரன் ஏதும் மிஸ்பா உல் ஹக் எடுக்க மாட்டார். அடுத்த பந்தை மிஸ்பா உல் ஹக் சிக்ஸராக விளாச 4 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்படும். அப்போது, அவர் வீசிய 3வது பந்தை மீண்டும் வானை நோக்கி மிஸ்பா உல் ஹக் அடிக்க அனைவரும் சிக்ஸர் என்று நினைத்த பந்தை இந்திய வீரர் மிஸ்பா உல் ஹக் கேட்ச் பிடித்து அசத்தியிருப்பார்.
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் அதிர்ச்சியில் உறைய முதன்முறையாக நடந்த டி20 உலகக்கோப்பையை முற்றிலும் இளம் ரத்தமான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. ஒரு கேப்டனாக தோனியின் வெற்றிப்பயணம் தொடங்கிய வரலாறும் இதே நாளில் என்றும் குறிப்பிடலாம். மறக்கவே முடியாத ஜாம்பவான்களின் புதிய பயணம் தொடங்கிய 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்த நாளில் வீரர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.