மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டியானது இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த உலகக் கோப்பைக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றன. மீதமுள்ள 2 இடங்களுக்கான போட்டியில் மொத்தம் 10 அணிகள் போட்டியிட்டன. இதற்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இதில், இலங்கை அணி இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதிப்பெற்றது.
ஒரு இடத்திற்கு போட்டிபோடும் மூன்று அணிகள்:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து வெளியேறியது. தற்போது, இலங்கை அணி உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், பிரதான போட்டிக்கான 1 இடத்துக்கான போட்டியில் தற்போது 3 அணிகள் களமிறங்கியுள்ளன. தகுதிச் சுற்று போட்டிகளை நடத்தும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியும் இதில் அடங்கும். இதுவரை, ஜிம்பாப்வே இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின்னர், 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் பாதை சற்று கடினமாகிவிட்டது.
ஜிம்பாப்வே அணி வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி (நாளை) ஸ்காட்லாந்துக்கு எதிராக சூப்பர் சிக்ஸில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால், அது ஒருநாள் உலகக் கோப்பைக்கான இடத்தையும் உறுதி செய்யும், ஆனால் அவ்வாறு வெற்றிபெறவில்லை என்றால், ஜிம்பாப்வே தகுதிச் சுற்றின் மற்ற போட்டிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டும்.
போட்டா போட்டியில் ஸ்காட்லாந்து - நெதர்லாந்து:
ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளும் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் போட்டியில் ஈடுபட்டுள்ளன . ஸ்காட்லாந்து 4 புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸ் புள்ளிகள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாட உள்ள கடைசி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். ஸ்காட்லாந்து அணி இதைச் செய்ய முடிந்தால், அது நேரடியாக தகுதி பெறும்.
நெதர்லாந்து அணியின் பாதை சற்று கடினமாகவே உள்ளது. ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிராக அவர்கள் விளையாடும் கடைசி 2 போட்டிகளில் பெரிய வெற்றியை பெற வேண்டும். இது அணியின் நிகர ரன்ரேட்டை மேம்படுத்தும். அதே நேரத்தில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஸ்காட்லாந்தின் வெற்றியை நெதர்லாந்து நம்பியிருக்க வேண்டும். நெதர்லாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.