12 ஆண்டுகளில் முதல்முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா அணி இழந்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. புனேவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.


நியூசிலாந்து அணி சாதனை:


இச்சூழலில், கடந்த அக்டோபர் 24 புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 259 ரன்களை எடுத்தது.


இதை தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த, நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. ஆனால், இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஜடேஜாவை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 245 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


தொடர்ந்து சொதப்பும் இந்தியா:


இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், 12 ஆண்டுகளில் முதல்முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா அணி இழந்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ள இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் அடுத்து ஆடும் 6 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சவாலான நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்து ஆட உள்ள தொடர் ஆஸ்திரேலிய தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.