இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பிறகு, அசைக்கமுடியாத வீரராக வலம்வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் பிரித்வி ஷா. இந்திய அணியின் வளர்ந்து வரும் பேட்டிங் திறமைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் பிரித்வி ஷா சில காலமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், அவர் உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.






2018-ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக திகழும் பிரித்வி ஷா, நடப்பு ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரராகவும் திகழ்கிறார். 


இந்தநிலையில், பிரித்வி ஷா மும்பையில் உள்ள சாலையில் ஒரு குறிப்பிட்ட கும்பலால் தாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது நண்பரின் காரில் பிரித்வி ஷா இரவு நேரத்தில் பயணம் செய்திருந்தபோது, மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல் அவரிடம் செல்பி எடுத்துகொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளது. இதற்கு, பிரித்வி ஷா மறுத்ததால் அந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரது நண்பரின் கார் மீது கற்களை வீச தொடங்கினர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். 






8 பேர் மீது காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டத்தின் (143, 148, 149, 384, 437, 504, 506) பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 


சச்சினுடன் ஒப்பிடப்பட்ட பிரித்வி ஷா:


பிரித்வி ஷா இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இல்லை என்றாலும், இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். கடந்த 2013ம் ஆண்டு ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் 546 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார். இதையடுத்து, அடுத்த சச்சின் இவர்தான் என்றும் கூறப்பட்டது.