கொல்கத்தா மைதானத்தில் பிசி போடர் என்று பொதுவாக அழைக்கப்படும் பெங்கால் அணியின் முன்னாள் கேப்டன் பிரகாஷ் சந்திர போடார், தனது 82வது வயதில் சமீபத்தில் காலமானார். முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் போடார், 1960 முதல் 1977 வரை 74 போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் உள்பட 3836 ரன்கள் எடுத்துள்ளார்.
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் திட்டமான BCCI யின் திறமை வள மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக போடார் இருந்தார்.
கடந்த 2003 ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் பீகார் U-19 போட்டியின் போது, இளம், நீண்ட கூந்தல் கொண்ட தோனியை போடார் கண்டார். அப்போதுதான் எம்.எஸ். தோனியை பிசிசிஐக்கு போடார் பரிந்துரைத்தார்.
BCCI யின் திறமை வள மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரியாக இருந்தபோது போடார், எம்.எஸ். தோனி விளையாடிய போட்டியை கண்டார். அப்போது தோனி வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும் தோனியின் செயல்களை உன்னிப்பாக கவனித்து, தோனிக்கு ஒழுங்காக கற்றுகொடுத்தால், ஒரு நாள் நல்ல கிரிக்கெட் வீரராக வரமுடியும் என நம்பினார்.
தோனிக்காக போடார் பரிந்துரைத்த படிவத்தில், “ தோனி ஒரு நல்ல ஸ்ட்ரைக்கர், அவருக்கு அதிக சக்தி உள்ளது. விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்த வேண்டும்,. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நன்றாக இல்லை. கீரிஸின் நடுவே ஓடுவதில் வல்லவர்”என குறிப்பிட்டு இருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே, 2003-04ம் ஆண்டு இந்தியா 'ஏ' அணியில் இடம்பிடித்த தோனி, சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். அங்கிருந்துதான் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது.
BCCI யின் திறமை வள மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரியாக பிரகாஷ் போடார், ஒரு வருடம் மட்டும் இருந்தாலும், தனது இறுதி மூச்சை விடும்வரை தோனியை கண்டறிந்ததை பெருமையாக கொண்டு இருந்தார்.
பிரகாஷ் போடார் வாழ்க்கை:
பிரகாஷ் போடார் 1940 அக்டோபர் 25 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். அவர் வங்காளம் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். போடார் 74 முதல்தர போட்டிகளில் விளையாடி 3,868 ரன்களை எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 199 ஆகும், அதே நேரத்தில் மொத்தம் 11 சதங்களை அடித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி:
எம்எஸ் தோனி எல்லா காலத்திலும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பலரால் கருதப்படுகிறார். இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருந்த காலத்தில் மகத்தான வெற்றிகளைப் பெற்றார். ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு சென்றார்.
இந்தியா பல கோப்பைகளை வெல்ல தோனி உதவுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பிரகாஷ் போடார் அவரைக் கண்டுபிடித்து, பிசிசிஐக்கு பரிந்துரைத்தார்.