Hardik Pandya: இலங்கை அணிக்கு எதிரான டி20தொடரில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட இளம் வீரர்களின் ஆதரவு தான் காரணம் என கூறப்படுகிறது.


ஹர்திக் பாண்ட்யா:


ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உள்ளார். ஏற்கனவே 16 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு, 12 வெற்றிகளை ஈட்டியுள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மாவிற்கு பிறகு, ஹர்திக் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன், ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது இடத்திற்கு ஹர்திக் நிரப்புவார் என பல்வேறு தரப்பினரும் கருதினர். ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்திக் அணியில் இருந்தும், துணை கேப்டன் பதவி கூட சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது.


உடற்தகுதி தான் காரணமா?


ஒருநாள் உலகக் கோப்பையின் போது துரதிர்ஷ்டவசமாக ஹர்திக் பாண்ட்யாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.  இதனால் ஐந்து மாதங்கள் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய அவர், எதிர்பார்த்த அளவில் சோபிக்காவிட்டாலும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். விமர்சனங்களை எல்லாம் தாண்டி வீரராக சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார். அதேநேரம், மும்பை அணி கேப்டனாக செயல்பட்டபோது, பல வீரர்கள் அவருக்கு எதிராக இருப்பதாக வெளியான தகவல், ஹர்திக்கின் கேப்டன்சி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல்தகுதி தொடர்பாக பிசிசிஐ ஏற்கனவே கவலை கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக ஹர்திக் அறிவித்துள்ளார். இது பிசிசிஐ நிர்வாகத்தை மேலும் கோபப்படுத்தியுள்ளது. 


இளம் வீரர்களின் ஆதரவை பெற்ற சூர்யகுமார் யாதவ்:


இதனிடையே பிசிசிஐ கருத்து கேட்டபோது, “பாண்ட்யாவை விட சூர்யாவை தாங்கள் அதிகம் நம்புவதாகவும், அவரின் தலைமையின் கீழ் விளையாடுவது மிகவும் வசதியாக இருப்பதாகவும்” இளம் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது சூர்யாவின் அமைதியான நடத்தை மற்றும் வலுவான தகவல் தொடர்பு திறன் வீரர்களை கவர்ந்துள்ளது. அவரது கேப்டன்சி ஸ்டைல் ​​ரோஹித் ஷர்மாவைப் போலவே இருப்பதாக பிசிசிஐ கருதுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான், தேர்வுக் குழு உறுப்பினர்கள் சிலர் பாண்டியாவை ஆதரித்த போதும், பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சூர்யகுமாரை டி20 கேப்டனாக நியமித்ததாக கூறப்படுகிறது.