ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பல பலமான கேப்டன்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா அணிக்கென இருக்ககூடிய குணமான, களத்தில் விளையாடுவது மட்டும் இல்லாமல் வீரர்களின் மனநிலையிலும் விளையாடும் அடிப்படை குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களில் மொத்தமும் மாறுபட்டவர் தற்போதைய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் உள்ள ஒற்றுமையான விஷயங்கள் என்னவென்றால், இருவருக்கும் கேப்டன் பொறுப்பு என்பது அணி நிர்வாகமே கொடுத்தது. அணிக்காக தங்களின் முழு ஒத்துழைப்பையும் கொடுக்கவேண்டும் என்ற மனநிலையில் இருவருக்கும் இருந்தது. அணி தோல்வியைத் தழுவிவிடும் என்ற மனநிலை அணிக்குள் இருக்கும் வீரர்களுக்கே வந்தாலும் கூட இருவரும் கடைசி பந்து வரை வெற்றிக்காக முயற்சி செய்யக்கூடியவர்கள். அதனால் தான் இவர்களால் கோப்பையை வெல்லத் தகுதியான கேப்டன்கள் என்ற பேச்சு இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 




உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியது, “ நாளை மைதானம் முழுவதும் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். நாளைக்கு எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் இருக்கும் ஒரே நேக்கம் மைதானத்தை முற்றிலுமாக அமைதியில் உறையச் செய்யவேண்டும் என குறிப்பிட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் பேட் கம்மின்ஸ் தான் கூறியதை செய்து காட்டியது மட்டும் இல்லாமல், ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்திலும் ஈட்டியை இறக்கினார். ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு தனது தலைமையில் மற்றுமொரு கோப்பை வென்று எடுத்துச் சென்றார். 




இந்நிலையில் கோப்பையுடன் ஆஸ்திரேலியா நாட்டுக்குச் சென்ற பேட் கம்மின்ஸிடம் பேட்டி எடுத்த தி ஏஜ் பத்திரிகையிடம் மிகவும் சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். அதாவது, 70 ஆண்டுகளுப் பிறகு உங்களது மரணப்படுக்கையில் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நினைத்துப் பார்க்கும் தருணம் என்றால் அது எது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ”உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டினைக் கைப்பற்றிய பின்னர் ஒட்டு மொத்த மைதானமும் அமைதியில் உறைந்ததுதான் என பதில் அளித்துள்ளார். 




மேலும், அந்த தருணத்தில் ஸ்டீவ் ஸ்மித், பாய்ஸ் ஒரு நொடி மைதானத்தில் உள்ள ரசிகர்களை கவனியுங்கள். நாம் கூறியதைப் போல் அந்த ஒட்டு மொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் உறைய வைத்துவிட்டோம். ஒட்டுமொத்த கூட்டமும் ஒரு நூலகத்தைப் போல் அமைதியாக உள்ளது. இந்த தருணத்தை நான் நீண்ட நாட்களுக்கு நினைத்துப் பார்ப்பேன் என எங்களிடம் கூறினார், இதைத்தான் நான் எனது மரணப் படுக்கையில் நினைத்துப் பார்ப்பேன்” என பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். 


உலகக் கோப்பைக்குப் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றது.