பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் ஹோஸ்டிங் உரிமையை இழக்கக்கூடும் அல்லது சில விளையாட்டுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படலாம் என்று ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ நடத்தும் நாடு பாகிஸ்தான் என ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்னும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் சாம்பியன்ஸ் டிராபியை ஹோஸ்டிங் செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை.


இந்த போட்டியை பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு எந்த நாட்டிலும் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதில் பாகிஸ்தான் முனைப்பு காட்டினாலும், 2023 ஆசியக் கோப்பையில் நடந்ததைப் போலத்தான் நடத்தவேண்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 


ஆசிய கோப்பை நடத்தப்பட்டதுபோல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட்டால், சில போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படலாம், மீதமுள்ளவை வெளிநாட்டில் நடத்தப்படலாம். குறிப்பாக இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாது.  சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. முதல் முறையாக ஐசிசி போட்டியை தனியாக நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெறவுள்ளது.  இருப்பினும், இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான வாய்ப்பு என்பது வாய்ப்பே இல்லை.


2023 ஆசிய கோப்பைக்கு, போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல மறுத்துவிட்டது. இதையடுத்து இந்தியாவின் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான இருதரப்பு உறவுகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்வதில்லை. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு விளையாட இரண்டு முறை வந்துள்ளது. அதாவது 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட வந்தது. 


பிசிபி அதிகாரிகள் சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள ஐசிசி நிர்வாகக் குழுவுடன் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மீண்டும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து விவாதித்துள்ளது.


சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ ஹோஸ்டிங் உரிமை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியை வற்புறுத்தியதாக ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 26ஆம் தேதி  PTI செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் அதற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கூறியதாக கூறப்படுகின்றது.


"கடந்த இரண்டு ஆண்டுகளில் பல உயர்மட்ட அணிகள் எந்தவித பாதுகாப்புக் கவலையும் இன்றி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா தனது அணியை அனுப்பவில்லை மற்றும் அதன் போட்டிகள் வேறு நாட்டிற்கு மாற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தால், ஐசிசி பாகிஸ்தானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் மிகவும் கறாராக சொல்லியுள்ளதாகவும் கூறுகின்றனர்.