உலகக் கோப்பை 2023 போட்டிக்கு முன்னதாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆசிய கோப்பை 2023 எப்போது தொடங்கும் என காத்திருக்கின்றனர். வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் இடையிலான போட்டியுடன் ஆசியக் கோப்பை 2023 தொடங்குகிறது.
முன்னதாக, பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோது இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து, இந்த போட்டியானது ஹைபிரித் முறையில் திட்டமிடப்பட்டு, பாகிஸ்தானில் முதல் 4 போட்டிகள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த முக்கிய போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது அணி கருத்து ஒன்றை தெரிவித்தார். தற்போது அது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பைக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆகஸ்ட் 22ம் தேதி இலங்கையில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன், பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வரவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை பட்டங்களை வெல்ல கடுமையாக உழைத்து வருகின்றோம். சிறப்பாக செயல்படுவதோடு, அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் வெற்றியை அடைய வேண்டும் என்ற பசி உள்ளது. ஒவ்வொரு வீரரும் மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மென்ஸ் காட்ட விரும்புகிறார்கள். வெவ்வேறு ஆட்டங்களில் வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் பட்டத்தை வென்றதையும் கடந்த சில போட்டிகளில் பார்த்தோம். இது அணிக்கு மிகவும் நல்ல விஷயம். பந்து வீச்சாளர்கள் பெரிய போட்டிகளில் தாங்கள் பந்துவீச்சு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காட்ட விரும்புகிறார்கள். என்னுடைய இந்த அணியின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படுவோம். இதன்மூலம், ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய நிகழ்வுகளை மனதில் வைத்து தயார் செய்வதில் கவனம் செலுத்துவோம். எந்தவொரு பெரிய நிகழ்வுக்கும் முன் இப்படியான தொடரில் விளையாடுவது பாகிஸ்தான் அணிக்கு இது மிகவும் நல்ல விஷயம்” என்று கூறினார்.