ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் திரும்பியுள்ளனர். இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக், ரவிசந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இந்த அணியில் இடம் பெறவில்லை. அதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட17 பேர் கொண்ட அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இருப்பினும் சஞ்சு சாம்சன் பேக்அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும், இந்திய அணியுடன் இலங்கை செல்லவுள்ளார். கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் திரும்பிய பிறகு இந்திய மிடில் ஆர்டர் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் ஆர்டர்:
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியைப் பார்த்தால், ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோலி போன்ற வீரர்கள் டாப் ஆர்டரில் இடம்பிடித்துள்ளனர். இதன் அடிப்படையில், டாம் ஆர்டரில் இஷான் கிஷன், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் மீது அதிக கவனம் இருக்கும். ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்த அணியில் ஆல்ரவுண்டர்களாக இடம்பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறவில்லை. அதே சமயம் கேஎல் ராகுல் திரும்பிய பிறகு 17 பேர் கொண்ட அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், சஞ்சு சாம்சன் ஒரு பேக்அப் வீரராக அணியில் இருப்பார்.
இன்னும் முழு தகுதிபெறாத கே.எல்.ராகுல்:
இந்திய அணியின் தலைமை தேர்வாளரான அஜித் அகர்கர், இந்திய அணியை அறிவிக்கும் போது, கே.எல்.ராகுல் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை என தெரிவித்தார். இதன் காரணமாக ராகுல், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அணி அறிவிக்கப்பட்டபோது அஜித் அகர்கர் தெரிவிக்கையில், “ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார் என தேசிய கிரிக்கெட் அகாடமி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் நல்ல செய்தி. கே.எல். ராகுலின் உடற்தகுதி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால். ஆசிய கோப்பையின் இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டிக்குள் அவர் உடல்தகுதியுடன் இருப்பார் என்று நம்புகிறோம், நடக்கும். இருவரும் எங்களுக்கு மிக முக்கியமான வீரர்கள்” என தெரிவித்தார். இதன்மூலம், செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார் என தெரிகிறது.
இன்னும் முழு உடற்தகுதி பெறாத கே.எல்.ராகுலை அவசர அவரசமாக இந்திய அணிக்கு கொண்டு வந்தது ஏன் என்று பிசிசிஐயை நெட்டிசன்கள் வெளுத்துவாங்கி வருகின்றனர். எத்தனையோ சிறப்பான வீரர்கள் நல்ல உடற்தகுதியுடன் இருந்தும், இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர்களை ஏன் எடுக்கவில்லை என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்), ஹர்திக் ஜடேஜா, ரவீந்திர ஜடேஜா. , அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா:
ஆகஸ்ட் 30 முதல் தொடங்கும் 2023 ஆசிய கோப்பை போட்டியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 2023 ஆசிய கோப்பையில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை செப்டம்பர் 2 ஆம் தேதி விளையாடுகிறது. அதே நேரத்தில், ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.