ஆசிய கோப்பை தொடரில் பி பிரிவில் இந்தியா ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அல்லது ஹாங்காங் அணிகளில் ஒரு அணி தகுதி பெற முடியும். இந்தச் சூழலில் இன்று கடைசி குரூப் போட்டி நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தான் -ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர்.
அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3வது ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஹாங்காங் பந்துவீச்சாளர் இஹ்சான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது பாபர் அசாம் கொடுத்த கேட்சை சிறப்பாக இஹ்சான் கான் பிடித்தார். இந்த கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து வருகின்றனர்.
மேலும் பலர் ஃபார்மில் இல்லாத விராட் கோலி ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்தார். ஆனால் ஃபார்மில் இருந்த பாபர் அசாம் ஹாங்காங் அணிக்கு எதிராக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பாபர் அசாம் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரும் ஃபாக்கர் ஜமானும் ஜோடி சேர்ந்து 2 விக்கெட்டிற்கு 117 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஃபாக்கர் ஜமான் 41 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளின் உதவியுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த குஷ்தில் அதிரடி காட்ட தொடங்கினார். அவர் அதிரடியாக 5 சிக்சர்கள் விளாசி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தார். 15 பந்துகளில் அவர் 35 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் ஒரு சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 78* ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டியை வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ஆசிய கோப்பை தொடரிலிருந்து திடீரென விலகிய ஜடேஜா! காரணம் இதுதான்! மாற்று வீரர் யார் தெரியுமா?