கனடா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டி20 உலகக் கோப்பை 2024:



கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 11) நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 22 வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின.


டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கனடா நாட்டின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்நீத் தலிவால் பேட்டிங் செய்தனர். 7 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற நவ்நீத் தலிவால் 1 பவுண்டரி விளாசி 4 ரன்களுடன் நடையைக்கட்டினார். பின்னர் வந்த பர்கத் சிங் 6 பந்துகள் களத்தில் நின்று 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.


மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் ஆரோன் ஜான்சன். ஆனால் அடுத்தாக களம் இறங்கிய நிக்கோலஸ் கிர்டன் 1 ரன்னிலும், ஷ்ரேயாஸ் மொவ்வா 2 ரன்களிலும், ரவீந்தர்பால் சிங் டக் அவுட் முறையிலும் வெளியேற நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் ஜான்சன் அரைசதத்தை பதிவு செய்தார்.


இதனிடையே பாகிஸ்தான் அணி வீரர் நஷீம் ஷா வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 44 பந்துகள் களத்தில் நின்ற ஆரோன் ஜான்சன் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 52 ரன்களை குவித்தார். பின்னர் வந்த கனடா அணியின் கேப்டன் சாத் பின் ஜாபர் 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  கலீம் சனா 13 ரன்களும், தில்லன் ஹெய்லிகர் 9 ரன்களும் எடுத்து களத்தில் நிற்க கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.


பாகிஸ்தான் அணி  வெற்றி:



இதனை அடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது பாகிஸ்தான் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினார்கள். 12 பந்துகள் களத்தில் நின்ற சைம் அயூப் 6 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டானார். பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வந்தார். முகமது ரிஸ்வானுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர்களது ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


முகமது ரிஸ்வான் அரைசதம்:


அதேநேரம் பாபர் அசாம் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக ஃபகார் ஜமான் பேட்டிங் செய்ய வந்தார். இதனிடையே தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் முகமது ரிஸ்வான். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 53 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 53 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.